அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர்.
ஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார் ஜெயலலிதா.
தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.