மாமல்லபுரம் சிற்பங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களைப் பார்ப்பதற்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து தங்களின் துன்பங்களை மறந்து இன்பங்களை வரவு வைத்து சென்று கொண்டு இருந்தனர். கொரோனா காரணமாக பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா நோய் தொற்றின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பொது முடக்கம் தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டு வருகிறார்கள். ஆறு மாதங்களுக்கு மேலாக வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள் சுற்றுலா செல்ல தொடங்கி உள்ளனர்.
உள்ளரங்கில் இயங்கும் திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், உணவகங்கள், மது பார்கள், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் போன்று இல்லாமல் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் திறந்தவெளியில் தான் உள்ளன.
ஆனால், மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களைச் சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் அவை பூட்டப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பி செல்கின்றனர்.
கொரோனா பரவலுக்கான சாத்திய கூறுகள் குறைவு என்பதால் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் சிற்பங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கவும், சுற்றுலாவை நம்பி வாழ்வாதாரம் இழந்து வறுமையோடு போராடிக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களின் நலன் கருதியும் மத்திய, மாநில அரசுகள் மேலும் கால நீட்டிப்பு செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.