முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி

310 0

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி, முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தடுப்பூசியை மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனிகா உற்பத்தி செய்யும். இதற்காக இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இதற்கிடையே, இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இளம் வயதினரை விட முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் அளிப்பதாக தெரிய வந்துள்ளது.

நல்ல ஆரோக்கியமான முதிய தன்னார்வலர்கள் 560 பேரை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், இளம் வயதினரை விட முதியோருக்கு பாதுகாப்பாகவும், எதிர்வினை குறைவாகவும் இருப்பது தெரிய வந்தது. அதாவது, முதியோருக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது.

முதியோரை கொரோனா அதிகமாக தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதால், இந்த கண்டுபிடிப்பு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டாக்டர் மகேஷி ராமசாமி தெரிவித்தார்.

அடுத்தபடியாக, இந்த தடுப்பூசி, கொரோனா வராமல் தடுக்குமா என்று 3-வது கட்ட பரிசோதனையில் ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் முடிவுகள், வரும் வாரங்களில் வெளியாகிறது.

இதன்மூலம், அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி, மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி, ரஷியாவை சேர்ந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ஆகிய 4 தடுப்பூசிகள் செயல்திறன் கொண்டவையாக உருவெடுத்துள்ளன.