ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவின் பாதுகாப்பை பலடுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனியவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பின்னர் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
பாத்திமா ஹாதியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவர் வெலிகடை சிறையிலிருந்து வெலிகந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதன் பின்னனியில் இத்தகைய முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சிறைச்சாலைகள் திணைக்களம் முழுமையாக முயற்சிக்கும் என நம்புவதாக சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு, ஹாதியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உறுதியான பாதுகாப்பு கட்டமைப்பொன்றினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் ஹாதியா தற்போது தடுத்தி வைக்கப்பட்டுள்ள இடம், அவரது பாதுகாப்புக்கு பொறுப்பாக செயற்படும் அதிகாரி உள்ளிட்டோரின் விபரங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறியத் தருமாறும் அந்த குழு கோரியுள்ளது.