அம்பாறையில் சட்டவிரோத மதுபானசாலை முற்றுகை

355 0

amparai-mathu-05-12-2016அம்பாறை தெகியத்தன் கண்டிய பகுதியில், சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பாறை, தெகியத்தன் கண்டி பகுதியில் உள்ள மதுபானசாலையொன்றை திடீர் முற்றுகை மேற்கொண்ட மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சட்ட விரோதமான முறையில் விற்பனைசெய்த பெருமளவான வெளிநாட்டு மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.

நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் முற்றுகையின்போதே இந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சுசாதரன் தலைமையில் மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா மற்றும் மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள் அடங்கிய குழு மேற்கொண்ட திடீர் நடவடிக்கையின்போது இந்த சட்ட விரோத வெளிநாட்டு மதுபானங்கள் மீட்கப்பட்டன.

இதன்போது ஐந்து லீட்டர்கள் அடங்கிய விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானம் உட்பட பல்வேறு வகையான வெளிநாட்டு மதுபானங்கள் 18 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் மதுபானம் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த மதுபானசாலைக்கு எதிராக மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு தொழில்நுட்ப குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

இதேபோன்று குறித்த பகுதியில் உள்ள இன்னுமொரு மதுபானசாலையில் பியருக்கு குறிக்கப்பட்ட விலையினை விட பத்து ரூபா விலை அதிகமாக விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு எதிராகவும் மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு தொழில்நுட்ப குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் இதன்போது குறிப்பிட்டார்.