கொழும்பு நகரத்தின் பல பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன என தெரிவித்துள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், கொரோனா வைரஸ் தொடர்பான விடயங்களில் அரச அதிகாரிகளிடமிருந்து போதியளவு ஆதரவு கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் குறைபாடுகள், பிரச்சினைகள் ஏற்படும்போது சுகாதார அமைச்சு பொதுசுகாதார பரிசோதகர்கள் மீது பழியை போடுகின்றது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
கொரோனா தொடர்பான விவகாரங்களில் எப்போதும் பழியை தங்கள் மீது போடுவது நியாயமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பு நகரத்தின் நிலையை பொறுத்தவரை பல பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன என்றும் இதன் காரணமாக பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் பல நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரின் கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க முயலும்போது சுகாதார அமைச்சுடன் தொடர்புபட்ட அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் போதியளவு ஆதரவை வழங்காததை தாங்கள் அவதானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் அந்த மக்களிற்கு போதுமான அளவு உணவுப்பொருட்கள் கூட வழங்கப்படவில்லை எனவும் பாலசூரிய தெரிவித்துள்ளார்