இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தப்படும் சர்வ மதக்குழுக்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுமத்தின் அமர்வு இன்று இடம்பெற்றது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நேரடியாக அல்லது மறைமுகமாகப் பாதிக்கப்பட்டோர் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சில பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் இந்த உண்மை கூறும் அமர்வில் முன் வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலனறுவை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் அனுபவங்கள் இங்கு முன் வைக்கப்பட்டதாக இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன தெரிவித்தார்.
இந்த அனுபவக் கதைகள் மூலம் வெளியிடப்படும் பாதிக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் உரிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதே இந்த அமர்வு ஒழுங்கு செய்யப்பட்டதன் பிரதான நோக்கங்களில் ஒன்று என இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.பி.சொர்ணராஜா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளவள வைத்திய ஆலோசகர் வைத்தியர் டி.கடம்பநாதன், மட்டக்களப்பு பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு பணிப்பாளர் எ.சி.எ.அசிஸ், அம்பாறை பிராந்திய பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு பணிப்பாளர் பி.டப்ளியு.சந்திரசிறி, மட்டக்களப்பு மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் கே.குணநாயகம், அம்பாறை நல்லிணக்க பொறிமுறை திட்ட உதவி பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக், பொலன்னறுவை நல்லிணக்க பொறிமுறை சங்க உறுப்பினர் எம்.எல்.முசத்தீக்கீன், சர்வ மத தலைவர்கள் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலொன்னறுவை, கண்டி, நுவரெலிய ஆகிய மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோரின் தெரிவு செய்யப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.