தோட்டத்தொழிலாளர்களின் வீடு மற்றும் காணிப்பிரச்சிளைகளுக்கு எதிர்காலத்தில் மனித உரிமை மீறல் அமைப்பின் மூலம் தீர்வு காணப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியா ஹட்டன் லெதண்டி தோட்ட புரடக் பிரிவுக்குச் செல்லும் வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்,
மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவை இணைந்து செயல்படும் இந்நிலையில் மக்களுடைய பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது. இதில் யார் யாரையும் ஏமாற்ற முடியாது.
தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று வடக்கு, கிழக்கு தமிழ் பிரதிநிதிகள் மற்றும் கட்சி தலைவர்கள் ஊடாக பேசப்படுகின்றது. வீடு, காணி, மனித உரிமை போன்ற விடயங்கள் அங்கே பேசப்படுகின்றன.
தேசிய ரீதியாக பேசப்படும் இப்பிரச்சினைகள் சர்வதேச ரீதியாகவும், பேசப்படும் வழிவகைகளை எதிர்காலத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுக்கும். யாழ்ப்பாணத்தில் அங்குள்ள மக்களுடைய பிரச்சினைகள் சர்வதேச மட்டத்திலும், மனித உரிமை மீறல் அமைப்பின் ஊடாகவும் பேசப்பட்டு தீர்வுகள் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்தவகையில் தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் வாழ்வாதார உரிமை பிரச்சினைகள் சர்வதேச மட்டத்தில் பேசப்பட வேண்டும். இதைவிடுத்து நாம் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தோட்டத்தின் அதிகாரிகள், கங்கானிகள் ஊடாக பேசி வருகின்றோம். இது எடுப்பான ஒன்று அல்ல.
காணி, வீடு, கல்வி போன்ற இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேசிய ரீதியில் கட்சிகள் மற்றும் அரசியல் ரீதியாக ஒற்றுமையும் தேவைப்படுகின்றது. அதேவேளை ஏனைய கட்சிகளுடனும் இணைந்து செயற்படும் வாய்ப்பும் தற்பொழுது கிட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.