பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே வாழைச்சேனையில் அமுலிலுள்ள ஊரடங்கு தளர்த்தப்படும்

260 0

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பாக அப்பகுதிகளில் மேலெழுந்தவாரியாக மேற்கொள்ளப்படவிருக்கும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

 

மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் ஐந்தாவது கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று (16) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அரசாங்க அதிபர் க.கருணாகரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இப்பிரதேசங்களில் தொடராக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதனால் இன்று மேலெழுந்தவாரியாக மேற்கொள்ளப்படவிருக்கும் பீசீஆர் பரிசோதனை முடிவுகள் எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமை அதிகாலை பெறப்படும். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் 55 நபர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகப்பிரிவில் 8 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 6 நபர்களும், பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் இருவரும், கிரான், வெல்லாவெளி, ஓட்டமாவடி, காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 76 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இப்பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 2378 பேருக்காக 10ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொட்டலங்களும், தொழில் பாதிக்கப்பட்ட 27 ஆயிரத்து 554 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவுமாக மொத்தம் 161 மில்லியன் ரூபா மாவட்ட செயலகத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, இராணுவ 231ஆம் படைப்பரிவு அதிகாரி மேஜர் தம்மிக பண்டார, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌபர், கோரளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சோபா ஜெயரஞ்ஜித், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் ஏ. மயூரன், கிழக்கு மாகாண கொரோனா தடுப்பு இணைப்பாளர் மருத்துவர் எம். அட்சுதன், மாவட்ட தொற்று நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி மருத்துவர் வே. குணராஜசேகரம் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.