ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் இஹ்ஸான் வீட்டுக்கு அடிக்கடி சென்ற ரிஷாட், ஹலீம்….!

291 0

முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் மொஹமட் ஹலீம் ஆகியோர் பல சந்தர்ப்பங்களில் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட முஹினுதீன் இஹ்ஸான் அஹமட்டின் வீட்டிற்கு சென்றிருந்தமை தற்போது தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (திங்கட்கிழமை முன்னிலையாகியிருந்த இஹ்சானின் வீடு அமைந்துள்ள பகுதியின் கிராமசேவகர் நிலாந்த சஞ்சீவா பொன்சேகா, சாட்சியமளித்தபோதே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இஹ்ஸான் வீட்டில் தங்கியிருந்தபோது இளைஞர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, குறித்த நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த நபரின் வீட்டிற்கு ரிஷாட் பதியுதீன், ஹலீம் மற்றும் வேறு சில பிரமுகர்கள் வீட்டிற்கு வருகை தந்ததாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக இஹ்ஸானைத் தவிர அப்பகுதியில் வசிக்கும் வேறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்று அரச சட்டத்தரணி விசாரித்தார்.

இதற்கு பதிலளித்த சாட்சி, அப்பகுதியில் வசிக்கும் மொஹமட் அக்ரம் அவ்காம் மற்றும் மொஹமட் அக்ரம் சஜிஹா ஆகிய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மேலும், வுஹாரி மொஹமட் ரபீக் என்ற மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இஹ்ஸானும் அவரது குடும்பத்தினரும் வாடகைக்கு வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் தம்மிக்க பிரியந்த சமரசிங்கவும் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி அன்று இஹ்ஸான் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு பதியுதீன் வீட்டை விட்டு வெளியேறுவதைக் கண்டதாகவும்சுமார் 30 நிமிடங்கள் வீட்டில் கழித்தார் என்றும் குறித்த சாட்சி கூறியுள்ளார்.