9 பேரை கொலை செய்வதாக அச்சுறுத்தியவர் தொடர்பில் சில முக்கிய தகவல்கள்

311 0

9 பேரை கொலை செய்யப்போவதாக தெரிவித்து துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ள இரத்தினபுரி – குருவிட்ட காவல்துறை கான்ஸ்டபிள் தொடர்பாக தற்போது சில முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

குறித்த கான்ஸ்டபிள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரத்தினபுரி – சிறிபாகம பகுதியில் கடமையில் இருந்து போது துப்பாக்கியுடன் தலைமறைவாகினார்.

அந்த துப்பாக்கியுடன் குருநாகல் பகுதியிலுள்ள அவரது உறவினர் வீடுகளுக்கு சென்ற அவர் தாம் 9 பேரை கொலை செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.

அந்த 9 பேரில் குருவிட்ட காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியின் பெயரையும் அவர் குறிப்பிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் குறித்த கான்ஸ்டபிள் வாடகைக்கு அமர்த்திய முச்சக்கரவண்டி காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இரத்தினப்புரி காவற்துறைப் பிரிவுக்கு பொறுப்பான உதவி காவல்துறை அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய குறித்த கான்டபிளை தற்காலிகமாக சேவையில் இருந்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.