தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்ரெம்பர் 22ஆம் நாள் தொடக்கம் சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, இன்று அதிகாலை அவருக்கு சிறு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு, இரத்தஓட்டம், மற்றும் சுவாசம் என்பன செயற்கையான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 12.45 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனைப் பகுதியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கண்ணீருடன் காத்திருக்கும் தொண்டர்கள், பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, அப்பல்லோ மருத்துவமனையில் இன்று முற்பகல் அவசரமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் தற்காலிக முதல்வரை நியமிப்பது தொடர்பாக ஆராயப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.