மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து 4 டாக்டர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற வேளையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஆஞ்ஜியோ கிராபை போன்றது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் தொடர்ந்து 24 மணி நேரம் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். 24 மணி நேரத்திற்கு பின் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முழுமையான தகவல்கள் தெரியவரும்.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து 4 சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா இன்றுகாலை தெரிவித்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த சுவாசச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.சி.கில்னானி, மயக்க மருந்தியல் நிபுணர் டாக்டர் அஞ்சன் திரிக்ஹா, இதயவியல் சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் சச்சின் தல்வார் மற்றும் டாக்டர் ராஜிப் நராங் ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.
இதுதொடர்பாக, கருத்து தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா, ‘தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு அரசுடன் தொடரந்து தொடர்பில் இருக்கிறோம். அவர் குணமடையை டெல்லி எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் சிறந்த சிகிச்சை அளிப்பார்கள் என நம்புகிறோம். அவரது உடல்நிலை தேற பிரார்த்திக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.