தமிழீழத் தேசிய மாவீரர்களை நினைவுகூரும் ஒழுங்கு விபரங்கள்-2020 – சுவிஸ்.

543 0

பேர்ண், 09.11.2020

தமிழ்மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களான தியாகிகள், காலங்காலமாக எமது இதயக்கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் –

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – சுவிஸ்

அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய சுவிஸ்வாழ் தமிழீழ மக்கள் அனைவருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் புரட்சிகரமான வணக்கம்.
தமிழர்களின் வீரத்தினையும் நியாயமான தேச விடுதலைப் போராட்டத்தினையும் உலகிற்கு எடுத்துக்காட்டிய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில், தமிழினத்தின் விடுதலைக்காகக் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட இடங்கள் புனித நினைவிடமாகவும், தமிழர் வீரத்தின் குறியீடாகவும் விளங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள், சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ள நிலையில், தாயகத்திலும் மற்றும் ஏனைய நாடுகளிலும் பரந்து வாழும் தமிழ்மக்கள், கொள்கை தவறாமல் இலட்சியப் பற்றுறுதியுடன் எழுச்சிகொள்ளும் ‘நவம்பர் 27’ தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது, அனைத்துலகரீதியாக ஆண்டுதோறும் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. அதேபோல், இவ்வாண்டும் சுவிஸ் நாட்டிலும் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீண்டும் அதிகரித்துவரும் கோவிட் 19இன் தாக்கம் காரணமாக, கடந்த 28.10.2020 அன்று சுவிஸ் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளிற்கமைவாக ஒன்றுசேரக்கூடியவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டிருப்பதனால், வழமைபோன்று இவ்வருட மாவீரர் நாள் நிகழ்வினை நடாத்துவதற்காகப் பிறிபேர்க் மாநிலத்தில் அமைந்துள்ள போறூம் (குழசரஅ) மண்டப நிர்வாகத்தினரிடம் எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதி இடைநிறுத்தப்பட்டிருக்கிறது என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தற்பொழுது பிறிதொரு மண்டபத்தில், சுவிஸ் மத்திய அரசின் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக வரையறுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையுடன் தேசிய மாவீரர் எழுச்சி நிகழ்வை நடாத்துவதற்கான மாற்று ஒழுங்குகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் அனைவரும் இணைந்த வகையில் இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்வினை வழமைபோன்று நடாத்துவது கடினமாக இருக்கும் என்பதனையும் அதற்கேற்றவகையில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் இல்லங்;களில் தேசிய மாவீரர்களை நினைவுகூர்வதற்காகக் கீழ்வரும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனையும் தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

தமிழீழத் தேசிய மாவீரர்களை நினைவுகூரும் ஒழுங்கு விபரங்கள்-

1. மாநிலங்களில், எமது செயற்பாட்டாளர்கள் ஊடாக, அவர்கள் பணியாற்றும் பகுதிகளில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் இல்லங்களுக்கு நேரடியாக வருகைதந்து மாவீரர் பொதுக்குறியீட்டுப்படம், மெழுகுதிரி, காந்தள் மலர் (காரத்திகைப் பூ) என்பன வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதுடன், பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள எமது அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்பதனையும் மேலதிக தகவல்களுக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

2. ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் இல்லங்களில் எம்மால் வழங்கப்படுகின்ற மாவீரர் பொதுக்குறியீட்டுப் படத்தினையும், தங்களிடம் இருக்கின்ற மாவீரரான தங்கள் உறவுகளின் திருவுருவப் படங்களையும் இணைத்து, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் (27.11.2020 வெள்ளி) அன்று, ஐரோப்பிய நேரம் 13:35 மணிக்கு (தாயகநேரம் மாலை 06:05 மணி) மணி ஒலிக்கவிடப்படும் (அனைவரும் அமைதியாக எழுந்துநிற்றல்). தொடர்ந்து அகவணக்கம், ஐரோப்பிய நேரம் 13:37 மணிக்கு (தாயக நேரம் மாலை 06:07 மணி) மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்குச் சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தி தேச விடுதலைக்காகத் தங்கள் உயிர்களை அர்ப்பணித்த எமது மாவீரர்களை நினைவுகூருமாறு வேண்டிநிற்கின்றோம்.

மேற்குறிப்பிட்டுள்ள நிகழ்வொழுங்கிற்கமைவாக, சுவிஸ் நாட்டில் உள்ள வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுஅமைப்புகள், தனியார்நிறுவனங்கள், வணிகநிலையங்கள் என்பவற்றிலும் உரியவாறு முன்னெடுக்கப்படவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு, சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் நடைபெறும் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பதோடு, அவை தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

அன்பான சுவிஸ் வாழ் தமிழ்மக்களே!
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அன்று தொடக்கம் இன்றுவரை முழுமையான ஆதரவுகளை வழங்கி வலுச்சேர்த்துவருகின்றீர்கள். அதனடிப்படையில், கடந்த காலங்களில் மாவீரர் நாள் நிகழ்விற்காக நீங்கள் வழங்கிய பங்களிப்பானது தேசிய மாவீரர் நாள் நிகழ்வோடு மட்டும் நின்றுவிடாது தமிழீழ விடுதலைக்காய் தங்களை அர்ப்பணித்துத் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துநிற்கும் மாவீரர், போராளிகளின் குடும்பங்கள் மற்றும் மக்களின் நிரந்தர மீள் வாழ்வாதார தேவைகளுக்காகவும் முழுமையாக பயன்படுத்தப்பட்டமை தாங்கள் அறிந்ததே. இவ்வாறான தொடர் பங்களிப்பினால் மட்டுமே போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தமுடியும். எனவே, தங்களது தாராள உதவிகளைத் தொடர்ந்தும் எதிர்பார்த்துநிற்கின்றோம்.

கோவிட் 19இன் பேரிடர் காலத்தில், உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியமான வாழ்வைக் கவனத்திலெடுத்து, சுவிஸ் அரசினால் வழங்கப்படும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறும், தொடர்ந்து வரும் காலங்களிலும்; தாயக இலட்;சியம் நோக்கிய விடுதலைப் போராட்ட முன்னெடுப்புகளுக்குத் தங்களின் புரிந்துணர்வு மிக்க உணர்வுபூர்வமான ஆதரவினையும்; முழுமையான ஒத்துழைப்புகளையும் வழங்கவேண்டும் எனவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிகத் தொடர்புகளுக்கு: 079 203 17 24, 079 711 30 97, 076 426 27 80, 078 965 09 18

நன்றி.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

விஜயரட்ணம் சிவநேசன் (ரகுபதி)
பொறுப்பாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை
பேர்ண், 09.11.2020