கலபொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு

256 0

1முல்லிம்களுக்கு எதிராக பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் ஞானசார தேரருக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான ரிசாட் பதியூதின், அக்கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான அமீர் அலி, மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் பொலிஸ் தலைமையகத்தில் ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

ஞானசார தேரரின் நடவடிக்கைகள் மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும் அண்மையில் அவர் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அல்லாவை மிகவும் கீழ்த் தரமான முறையில் விமர்த்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒளிப்பதிவு நாடாவும் பொலிஸ் மா அதிபரிடம் கையளித்துள்ளனர்.