யாழ். மருத்துவ பீடத்தில் இன்று முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனை

272 0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இன்று புதன்கிழமை முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடம் மருத்துவ பீடத்தில் இருந்து வேறாக்கப்பட்டு, தனியான பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி. சி. ஆர் பரிசோதனைகள் இன்று முதல் இடம்பெறவுள்ளன.

மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ. முருகானந்தன், மு. கலாமதி மற்றும் பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் மட்டுமே இந்தப் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர். இவர்களுடன் பணியாற்றுவதற்கென யாழ். பல்கலைக்கழகத்தினால் நான்கு நுண்ணுயிரியல் ஆய்வு கூடவியலாளர்களும் புதிதாகப் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

வடக்கில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ். போதனா வைத்திய சாலையில் மாத்திரம் பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பி. சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை யாழ் . பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எஸ். கேதீஸ்வரன், உதவிப் பணிப்பாளர் மருத்துவர் எஸ். குமாரவேல், யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி, யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ், சமுதாய மருத்துத் துறைத் தலைவரும், பல்கலைக் கழக கோவிட் 19 செயலணியன் இணைப்பாளருமான மருத்துவர் எஸ். சுரேந்திரகுமாரன் மற்றும் நுண்ணுயிரியல், நோயியல் துறை விரிவுரையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போதுள்ள பி. சி. ஆர் பரிசோதனை இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மாதிரிகளே சோதனை செய்யப்பட முடியும். மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்படும் பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகள் தினமும் மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எஸ். ரமேஸ் தெரிவித்துள்ளார்.