தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 – மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம்.

1207 0

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020

எமக்கு ஒரு நாடு வேண்டும். எமது மக்களுக்கு விடுதலை வேண்டும். எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள். எனவே, எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது.
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
09.11.2020

அன்பார்ந்த தமிழீழ மக்களே!
எமது தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரச் செல்வங்களுக்குச் சுடரேற்றி, மலர்தூவி வணக்கம் செலுத்துவதற்காக, முதன் முதலாக விடுதலைக்கு வித்தாகிய லெப்.சங்கர் அவர்கள், வீரச்சாவடைந்த நவம்பர் 27ஆம் நாளைத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், 1989 ஆம் ஆண்டு மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தியிருந்தார். அன்றிலிருந்து தமிழ் மக்களால் தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டு, மாவீரச்செல்வங்களின் பெற்றோர், உரித்துடையோர் இக்காலத்தில் மதிப்பளிக்கப்பட்டு வருகின்றார்கள்.

மாவீரர்கள் எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் மூன்று தசாப்த காலம் நடைபெற்ற உரிமை மீட்புப்போரில் வியத்தகு சாதனைகள் புரிந்து, சிறிலங்கா அரசுக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்தார்கள். எதிர்காலச் சந்ததியினர், எமது தேசத்தில், சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தமது விருப்புகளைத் துறந்து, இனவிடுதலையை மனதிலிருத்திக் களமாடி வீழ்ந்தார்கள்.

ஆண்டுதோறும், அனைவரும் ஒன்றுகூடி நினைவேந்தி, எமது மாவீரச்செல்வங்களின் தியாகங்களை உலகறியச்செய்வதுடன், எமது உறுதியான விடுதலை வேட்கையையும் வெளிப்படுத்தி வருகின்றோம். இவ்வாண்டு, உலகமே கோவிட் 19இன் கொடிய தொற்றுப் பரவலின் பாரிய தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள இடர்களால் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கமைய, வழமைபோல் அனைவரும் ஒன்றிணைந்து நினைவுகூரமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.

அன்பான மாவீரர் பெற்றோர்களே! உரித்துடையோர்களே! மக்களே!

எவ்வகையான இடர் வந்தாலும் மாவீரர்களைப் போற்றும் புனிதநாள் நினைவுகளை, தற்போதைய காலநிலமைக்கேற்ப சிறப்பாகச் செய்து முடிப்பதற்கான ஏற்பாடுகளனைத்தும் நீங்கள் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் மாவீரர் பணிமனை ஊடாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தாயகத்தில், இம்முறை மாவீரர்களை நினைவுகூர்வதற்கு திட்டமிட்ட அரச ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. எத்தனையோ தடைகளைத் தாண்டி, எங்கள் மக்களின் சுதந்திர வாழ்விற்காக, எமது வீரமறவர்கள் எமது மண்ணை முத்தமிட்டார்களோ, அதே உத்வேகத்துடன் அவர்களின் நினைவெழுச்சிநாளான மாவீரர் நாளில் லெப். சங்கர் அவர்கள், வீரச்சாவடைந்த தாயகநேரம் மாலை 06.07 மணிக்கு சுடரேற்றி நினைவேந்த, நாம் உறுதியுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட்டு எம் மாவீரச்செல்வங்களை வணங்கி உறுதியெடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்,