வலுவிழந்த பிள்ளைகளுக்கான தேசிய கல்விக் கொள்கையை அமைப்பதற்கும் வலுவிழந்தவர்களுக்கான சர்வதேச பிரமாணங்கள் மற்றும் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகளை நீக்குவதற்கும் தேவையான நிறுவன மற்றும் சட்டப் பின்புலத்தை அமைக்கவிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
வலுவிழந்தவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று பொலன்னறுவை தேசிய கல்வி விஞ்ஞான பீடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
‘நாம் விரும்பும் எதிர்காலத்திற்காக பதினேழு இலக்குகளை அடைந்துகொள்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ் சமூக வலுவூட்டல், நலன்பேணல் அமைச்சும் வலுவிழந்தவர்களுக்கான தேசிய பேரவையும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடுசெய்துள்ளன.
வலுவிழந்தவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வு ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதுடன், 1992 ஆம் ஆண்டு முதல் இலங்கை உட்பட ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் சகல நாடுகளிலும் அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது.
இத்தினத்தை அனுஷ்டிப்பதன் மூலம் வலுவிழந்தவர்கள் தொடர்பான விடயங்களை விளங்கிக்கொள்ளுதல், வலுவிழந்தவர்களின் உரிமைகள் மற்றும் நலன் பேணலுக்காக அனுசரணையை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவிழந்தவர்கள் வலுவிழக்காதவர்களில் தங்கியிருக்கவேண்டியதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வலுவிழந்தவர்களும் அவ்வாறு அல்லாத சாதாரண பிரஜைகளும் சம உரிமை மற்றும் சலுகைகளுடன் சமூகத்தில் வாழவேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வலுவிழந்தவர்களின் ஆக்கத்திறன்களை மேம்படுத்துவதற்குத் தேவையான பின்புலத்தை அமைத்துக்கொடுக்கும் அரசாங்கத்தின் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் அவர்களுக்கான சர்வதேச பிரமாணங்களையும் உடன்படிக்கைகளையும் அதனையும் தாண்டிய மனிதாபிமான பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வில் வலுவிழந்த பிள்ளைகளுக்கிடையே 2016 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்தவர்கள், கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், வலுவிழந்த புதிய உற்பத்தியாளர்கள், பரா ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றி திறமையை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் செயற்கைக் கால்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது திவி நெகும அபிவிருத்தி அதிகாரிகள், முகாமையாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
சமூக வலுவூட்டல், நலன் பேணல் அமைச்சர் எஸ். பீ திசாநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் பீ பீ திசாநாயக்க, முதலமைச்சர் பேசல ஜயரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது