பள்ளிகளை திறக்கலாமா?- பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் தொடங்கியது

254 0

வருகிற 16ந்தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா? என்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் தொடங்கியது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் கருத்துக்கேட்கப்படும் என்றும், அதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் 9-ந்தேதி இன்று நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 9, 10, 11, 12-ம் வகுப்புகள் உள்ள பள்ளிகளில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு இன்று தொடங்கியது.

சென்னையில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம்  தொடங்கியது. தனிமனித இடைவெளியுடன் சென்னையில் உள்ள பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை கூறுகின்றனர். கூட்டத்தில் பங்கேற்க இயலாதவர்கள் பள்ளிகள் திறப்பு பற்றி கடிதம் மூலம் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் பள்ளி திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும்.