சமூகத்திற்குள் அறிகுறியற்ற கொரோனா தொற்று நோயாளிகள் இருக்கக்கூடும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு எச்சரித்துள்ளது.
மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு இன்று நீக்கப்படும் போது பொதுமக்கள் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கருதி, பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பக்கூடாது என்றும் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால், அது கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து உள்ளது என்று அவர் எச்சரித்தார்.
“உங்களுக்கு அறிகுறிகள் இல்லாததால் உங்களுக்கு வைரஸ் இருப்பது உங்களுக்குத் தெரியாது. அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு வைரஸ் இருக்கலாம், அறிகுறிகளைக் காட்டாமல் இருக்கலாம். எனவே ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும், நீங்கள் வீட்டிலேயே தங்கி, தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும்” என கூறினார்.
வயது கூடியவர்களும் நோய்களால் பாதிக்கப்படுபவர்களும் வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் அதிகம் உள்ளதாகவும், இவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.