பா.ஜ.க. வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும்- வானதி சீனிவாசன் வேண்டுகோள்

283 0

கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்து பா.ஜ.க. வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார்.பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், சென்னையில் இருந்து டெல்லி சென்றார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் தலைமையில் தமிழகம் முழுவதும் வெற்றிவேல் யாத்திரை மூலமாக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து செல்ல திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது துரதிர்ஷ்டவசமானது. யாத்திரை செல்ல முயன்ற மாநில தலைவர் உள்பட நிர்வாகிகளை கைது செய்து உள்ளனர்.

கொரோனாவில் இருந்து சிறிது சிறிதாக மக்கள் மீண்டு வாழ்க்கை முறையை அமைத்து வாழ ஆரம்பித்து உள்ள சூழ்நிலையில் மக்களை சந்திக்க, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தான் யாத்திரைக்கு முடிவு செய்யப்பட்டது.

மீண்டும் வேல் யாத்திரையை நாளை (அதாவது இன்று) பா.ஜ.க. தலைவர் தொடர இருக்கிறார். இந்த யாத்திரைக்கு மாநில அரசு ஒத்துழைப்பு தரவேண்டும். தொற்றில் இருந்து பாதுகாப்புடன் செல்ல எந்தவொரு கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்தாலும் பரவாயில்லை. பா.ஜ.க. வேல் யாத்திரையை தொடர முதல்-அமைச்சர் அனுமதி வழங்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். பெண்கள் மத்தியில் பிரபலமானவர். பெண்கள் மீது கருணை, பாசம் கொண்டிருந்தார். அதுபோல்தான் பிரதமர் மோடி, தமிழக பெண்களுக்கு பாதுகாவலராக திட்டங்கள் மூலம் இருக்கிறார். அதை சொல்லத்தான் பா.ஜ.க. கலைப்பிரிவு எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்தி இருப்பார்கள். எம்.ஜி.ஆர். படத்தை பயன்படுத்துவதில் தவறு இல்லை.

காமராஜர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றாலும், காமராஜர் வழியில் ஆட்சியை நடத்த வேண்டும் என்ற கருத்தை பா.ஜ.க. பல்வேறு இடங்களில் சொல்லி வருகிறது. நேர்மையான, எளிமையான, வெளிப்படையான நிர்வாகம் செய்த காமராஜரை உதாரணமாக சொல்லுகிறோம். நல்ல தலைவர்களை தலையில் தூக்கி கொண்டாடுவதில் தவறு கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.