யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபான நிலையம் நேற்று மாலைவேளையில் யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் பிரிவு அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களும் கையகப்படுத்தப்பட்டது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில் ,வேலணைப் பகுதியில் முன்பு இயங்கிய மதுபான விற்பனை நிலையத்தின் அனுமதி தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளபோதிலும் தற்போதும் சட்ட விரோதமாக இயங்கி வருவதாக விசேட பொலிஸ் அதிகாரிகளிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்றைய தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்பிரகாரம் குறித்தமதுபான நிலையம் நேற்று மாலை வேளையில் பொலிஸ் அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மதுபான நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களையும் கைப்பற்றினர்.
இதன்போது நூற்றிற்கும் மேற்பட்ட மதுபான வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட மதுபானங்களும் நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக மதுவரித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.