கொரோனாவால் 8 நாட்களில் 14 பேர் உயிரிழப்பு – அதிக மரணங்கள் கொழும்பிலேயே பதிவு

341 0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில் 34 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த 34 மரணங்களில் இம்மாதத்தில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி மார்ச் மாதம் இரு மரணங்களும் ஏப்ரலில் 5 மரணங்களும் மே மாதம் 3 மரணங்களும் ஜூன் மாதம் ஒரு மரணமும் ஓகஸ்ட் மாதம் ஒரு மரணமும் செப்டெம்பரில் ஒரு மரணமும் ஒக்டோபரில் 7 மரணங்களும் நவம்பரில் 14 மரணங்களும் பதிவாகியுள்ளன.

நாட்டில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதிலிருந்து ஜூலை மாதத்தில் மாத்திரமே எந்த மரணமும் பதிவாகவில்லை.

இதேநேரம், நாட்டில் அதிகளவில் ஆண்களே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய இதுவரையில் 18 ஆண்களும் 16 பெண்களும் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தோர் 19 வயது தொடக்கம் 88 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரவில, கொச்சிக்கடை, மருதானை, ஹோமாகம, தெஹிவளை, கல்கிசை, பொல்பிதிகம, முகத்துவாரம், திருகோணமலை, ஹோமாகம, மாவத்தகம, நுகேகொடை, குளியாபிட்டி, கொம்பனிவீதி, ஜாஎல, கொழும்பு, மஹர, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, கனேமுல்ல மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளிலேயே இதுவரையில் மரணங்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் 8 பேர் அவர்களது வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர். ஏனையோர் கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஐ.டி.எச். வைத்தியசாலை, நீர்கொழும்பு, வெலிக்கடை, ஹோமாகம, திருகோணமலை, சிலாபம், குளியாபிட்டி, வத்தளை தேசிய வைத்தியசாலை மற்றும் பிம்புர வைத்தியசாலை ஆகியவற்றில் உயிரிழந்துள்ளனர்.

இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மாத்திரம் நால்வர் உயிரிழந்தனர். கொழும்பு, மாளிகாவத்தையைச் சேர்ந்த இருவர், கனேமுல்ல மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் தலா ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளனர்.

இதேவேவை, நாட்டில் நேற்று மாத்திரம் 455 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 937ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 415ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 537 பேர் நேற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், இதுவரை ஏழாயிரத்து 723 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 662 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.