‘ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு என்றுமே தீர்வு காணமுடியாது’-கலாநிதி.சி.சிவமோகன்

327 0

sivamohan-mp-450x299வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தழிழ முஸ்லீம் மக்களுக்கான வாழ்வியல் பிரச்சனைகள் தனித்துவமானவை. நாம் வடகிழக்கில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏனைய மாகாண மக்களுக்கு  இல்லாதவை என்பதை முதலில் இந்த பாராளுமன்றம் உணர்ந்துகொள்ள முன்வர வேண்டும்.

அதுதான் தமிழர்களுக்கான இனப்பிரச்சனையாக உருவெடுத்தது. 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த பின் இன்று 70 வருடங்களைக் கடக்கின்ற பொழுதிலும் இலங்கை ஒரு நாடு என எண்ணுபவர்கள் வட கிழக்கு மக்களின் யதார்த்த பூர்வமான பிரச்சனைகளை உணர முன்வரவில்லையென்பது கசப்பான ஒரு உண்மை என்பதை கூறி வைக்க விரும்புகிறேன்.

இப்படியாக உருவாகிய இனப்பிரச்சனையே ஒரு பாரிய தமிழ் இன விடுதலைப் போராக உருவெடுத்தது என்பதும் யாவரும் இலகுவில் மறந்துவிடக் கூடியது அல்ல. ஒரு பாரிய உள்நாட்டுப் போரில் தமிழர்களும், சிங்களவர்களும் நேருக்கு நேர் மோதினார்கள் என்பதை சர்வதேசம் உட்பட எவரும் மறந்துவிட முடியாது.

பல இலட்சம் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களை பலி கொடுத்த பின் நல்லிணக்கம் என்னும் ஒரு பொறிமுறையில் இந்த பாராளுமன்றில் விவாதித்துக்கொண்டு இருக்கிறோம். வட கிழக்கு மாகாணங்களில் பலாத்காரமான சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

அதுவும் இராணுவத்தின் துணையுடன.; வெலியோயாவில் என்ன நடைபெற்றது? யுத்த காலத்தில் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லையா? மணலாறு என தமிழ் பெயருடன் இருந்த பிரதேசம் வெலியோயா என பெயரிட்டு ஜனக புர, கல்யாண புர,  போகஸ்வெவ எனப் பல சிங்கள குடியேற்றங்களாக உருவெடுத்தது.

போகஸ்வெவ எனும் கிராமம் இராணுவத்தின் துணையுடன் சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டது. கன்னியா வெந்நீர் ஊற்று தமிழ் பாரம்பரிய பிரதேசம் இன்று முழுமையாக ஒரு சிங்கள அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் சென்று பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

1000 ஏக்கர் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் டொலர் பாம், கென்; பாம் என்ற சிங்கள குடியேற்றங்கள் 1984ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டன. தனிக்கல் என அழைக்கப்பட்ட தமிழ் பிரதேசம் கல்யாண புர என்ற குடியேற்றமாக அபிவிருத்தி செய்யப்பட்டது.

கருவேப்பங்குளம் என்பது தமிழர் பிரதேசம் அங்கு இன்றும் தமிழர்களின் அழிவடைந்த வாழ்விடங்களை காணக்கூடியதாக இருக்கின்றது. இன்று எமது மக்கள் தமது வாழ்விடத்தைத் திருத்தி பயிர் செய்ய முயலும்போது வன வள பிரிவினர் தடை விதிக்கின்றனர்.

வன வள பிரிவினர் இன ரீதியில் செயற்பட முற்படுவதாக அந்த மக்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே உருவாக்கப்பட்ட கல்யாணபுர பிரதேசத்துடன் கருவேப்பங்குளம் இணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

இது தான் எமது தமிழர்கள் எதிர்நோக்கும் இனப்பிரச்சனை. வட மாகாண சபைக்கு உரித்தான கடமைகள் அனைத்தும் ஏட்டுச் சுரைக்காயாகவே காணப்படுகின்றது. 13 வது திருத்தம் என்று கூறி ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அரசு அனைத்தையும் நிர்மூலமாக்கியது.

இதுவே இன்று இனப்பிரச்சனையாக உருவெடுத்து நிற்கின்றது. 1949ம் ஆண்டு கல்லோயா குடியேற்றம் என்று ஆரம்பித்த திட்டமிட்ட இன ரீதியான குடியேற்றங்கள் இன்று மன்னார் சிலாபத்துறையில் சிங்கள மீனவர் குடியேற்றம் வரை தொடர்ந்து வருகின்றது.

இந்தப் பிரச்சனை வட கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த வேறு எந்த ஒரு மாகாணத்திற்கும் இல்லாதது. இது தான் வட மாகாணத்திற்குரிய, வட கிழக்கு மாகாணங்களுக்குரிய, மக்களுக்குரிய பிரச்சனையாக இன்று இருந்து வருகின்றது. இது தான் இனப்பிரச்சனையும் கூட.

எனவே திட்டமிட்ட அரசியல் ரீதியான இராணுவ மயப்படுத்தப் பட்ட குடியேற்றங்களும் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் வட கிழக்கு மாகாணங்களுக்குரிய தனித்துவமான பிரச்சனை. இது ஒரு இனரீதியான பிரச்சனையாக எமது மக்களால் எதிர்நோக்கப்படுகின்றது.

அதே போல் இராணுவம் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் காணிகளையும் எமது மாவட்டத்திற்கு முக்கியத்துவமான காணிகளையும் அபகரித்திருக்கிறார்கள்.

இப்படியொரு விடயம் வேறு எந்தவொரு மாகாணத்திலாவது நடந்ததாக இந்த பாராளுமன்றத்தில் இதுவரை யாரும் குறிப்பிடவில்லை. ஆனால் இங்கு எமது வட்டுவாகல் பிரதேசம,; கொக்கிளாய், புதுக்குடியிருப்பு, கேப்பாப்புலவு, என பல கிராமங்கள் அவர்களால் எமது மக்களின் காணிகள் உட்பட ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது ஒரு கவலைக்குரிய விடயம்

இது ஒரு இராணுவ அராஜகத்தின் ஒரு வடிவம் இது தான் எமது பிரச்சனை இன்னொரு வடிவம். இது ஏனைய மாகாணங்களுக்கு இல்லாதது. எனவே ஒற்றை ஆட்சியில் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு என்றும் தீர்வு வராதென நாம் நம்புகிறோம்.

எமது தமிழ் மக்களின் சுய பாதுகாப்பு இன்றுவரை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 1956 இல் இங்கினியார்கள் படுகொலையில் தொடங்கியது இன்றுவரை 252 தடவைகள் கூட்டம் கூட்டமாக தமிழர்கள் என்பதற்காகவே கொலை செய்யப்பட்டனர்.

இவை அனைத்தும் தமிழினப் படுகொலைகளே. 09-05-1958 இல் 300க்கு மேற்பட்டதமிழர்கள் கொல்லப்பட்டனர்.01-01-1974 தமிழாராட்சி மாநாட்டு படுகொலை 9பேர் இலங்கை பொலிசாரால் தான் கொல்லப்பட்டனர். 1977 தமிழின படுகொலை நடைபெற்ற பொழுது 1500 தமிழர்கள் தங்களது இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள்.

1983ல் கலவரத்தில் 3000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதிருந்த அரச அதிபர் கூறியிருந்தார் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம். சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக போர் செய்த கொடுமை அரங்கேறியது.

குமுதினி படுகொலை 15-05-1985 இல் நிறைவேறியது. ஒதிகை மலை என்ற கிராமத்தில் நேற்று தான் அதற்கு நினைவுதினம். ஒதிகை மலையில் இருந்த ஒட்டுமொத்த குடும்பத்தர்களை 1984ம் ஆண்டு டிசெம்பர் 02ம் திகதி 32 குடும்பஸ்தர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.

இது படையினரால் செய்யப்பட்ட ஒன்று. இப்படியாக நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைகளே தமிழர்களின் இனப்பிரச்சனையாக உருவெடுத்து நின்றது.

இன்றும் கூட பொலிசார்களின் செயற்பாடுகள் சந்தேகத்திற்குரியதே.

வட கிழக்கு மாகாணங்களில் வனவளப்பிரிவு என்பது ஒரு மத்திய அரசின் பிரிவு. இவர்களுடன் சேர்ந்து செயற்படும் இந்தப் பொலிசார் பெரிய அளவில் மரக்கடத்தலை செய்பவர்களை எவ்வித இடையூறுமின்றி விட்டு விடுகிறார்கள்.

ஆனால் எமது மக்களின் அன்றாட தேவைகளை அவர்கள் மதிக்கவில்லை. மாவட்ட அபிவிருத்திக்குழுவில்  நாம் சில தீர்மானங்களை எடுத்திருந்தோம். மக்களுக்கான மணல், கிரவல் போன்ற தேவைகளை தயவு செய்து வழங்குங்கள் என்று  பிரதேச சபைகள் தாம் எடுத்துக் கொள்ளும் வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மணல் கிரவல் கிடைக்காமல் மிகவும் அல்லல் பட்டு வருகிறார்கள்.

இந்த விடயத்தில் வனவளப்பிரிவு இதனுடன் சம்பந்தப்பட்ட பிரிவுகள் எந்த விதத்திலும் விட்டுக்கொடுப்புகளை செய்யவில்லை. இதனால் பல வேலைத்திட்டங்கள் இன்று இடையூறாய் இருக்கின்றது என்பதையும் குறித்துக் கொண்டு இந்த பிரதேச சபைகளுக்கூடாக நடைபெறும் மணல், கிரவல் விடயங்களில் அமைச்சர்கள் முக்கிய கவனம் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.