இந்தியாவின் கரையோரத்தை மீண்டும் சூறாவளி தாக்கும் அபாயம்

293 0

indiaஇந்தியாவின் கரையோர பிரதேசத்தை மீண்டும் ஒரு சூறாவளி தாக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்கள உத்தியோகத்தர் க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

நாடா சூறாவளியானது கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வலுவிழந்து, தழிழ்நாட்டின் காரைக்கால் அருகே ஊடறுத்துச் சென்றது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு சூறாவளி இந்தியாவின் கரையோரப் பிரதேசத்தைத் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் உருவாகியுள்ள தாழமுக்க வலயமானது  தற்போது தென் சீனக் கடல் பிராந்தியத்திலிருந்து வங்காளவிரிகுடப் பகுதியில் நுழைவதற்கு மலாக்கா மற்றும் தெற்கு தாய்லாந்துப் பகுதியைக் கடந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தாழமுக்க நிலைமையானது எதிர்வரும் 02 அல்லது 03 நாட்களில் அண்ணளவாக வடமேற்குத் திசையில் நகர்ந்து இந்திய நிக்கோபார் தீவுகளை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது, பின்னர் மீண்டும் வலுவடைந்து, எதிர்வரும் 6ஆம் அல்லது 7ஆம் திகதிகளில் அயனமண்டல சூறாவளியாக வலுவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு அது சூறாவளியாக மாறும் சந்தர்ப்பத்தில் தெற்காசியப் பிராந்தியங்களுக்கான புதுடில்லியில் தலைமையகத்தைக் கொண்ட பிராந்திய விசேட வானிலை மையத்தால் இந்த சூறாவளிக்கு பாகிஸ்தான் நாட்டினால் முன்மொழியப்பட்ட வர்டா என்றும் பெயர் சூட்டப்படும்.

பின்னர் இது, எதிர்வரும் 10ஆம் அல்லது 11ஆம் திகதியளவில் அதன் வலு குறைவடைந்த நிலையில் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கரையோரப் பிரதேசத்தை தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்கள உத்தியோகத்தர் க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.