நீதிமன்ற உத்தரவை மீறி, நீர்கொழும்பு – கல்கந்த ரயில் கடவையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட 19 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சந்தேகநபர்களை நீர்கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.
இதற்கமைய அவர்களை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, நீதிமன்றத்தை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டன.
கடந்த 2ம் திகதி காலை முச்சக்கர வண்டி மற்றும் பஸ் ஊழியர்கள் இணைந்து நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் கல்கந்தை ரயில் கடவையை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் பிரதான வீதி மற்றும் ரயில் பாதையிலான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனினும் தொடர்ந்தும் அப் பகுதியில் குழப்ப நிலை நீடித்ததால், பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் 19 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதேவேளை, இதன்போது 13 முச்சக்கர வண்டிகள், பஸ் ஒன்று மற்றும் லொரி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.