தோல்வியடைந்த முன்னாள் ஆட்சியாளர்கள் அடிப்படை வாதிகளைக் கூடுதலாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர், அவர்களது முக்கியமான நோக்கம் தமிழர்களை வன்முறைக்குத் தூண்டுவதேயாகும் என, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலை பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறியதாவது, மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அடிப்படை வாதங்களான மதவாதம், இனவாதம், மொழிவாதம் என்பவற்றை வெளிப்படையாகக் காட்டி விசமத்தனமாகச் செயற்படுவதை தமிழ், முஸ்லிம் மக்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
இவர் அண்மைக் காலமாக தமிழ் பேசும் மக்களைப் புண்படுத்தக் கூடிய விதத்தில் மட்டுமல்லாது பௌத்த மதத்தின் புனிதத்துவத்தையும் மாசுபடுத்தக் கூடிய விதத்தில் செயற்பட்டு வருகின்றார்.
சுமணரத்ன தேரர் மட்டக்களப்பில் அடிப்படைவாதத்தினைக் கக்கிக் கொண்டிருக்கும் அதேவேளை, அவரைப் பலப்படுத்துவதற்காக ஞானசார தேரர் தென்பகுதியில் இருந்து தனது அடிப்படைவாதிகளுடன் மட்டக்களப்பை நோக்கி வந்து கெண்டிருந்தார்.
இவரது கூட்டத்தினரைப் பொலனறுவையில் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிசார், அதிரடிப்படையினர், மேற்கொன்டனர்.
ஞானசார தேரரின் கூட்டத்தினர் பயணித்து வந்த பல வாகனங்கள் பொலனறுவை எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதனையும் அத்துமீறி இவரது கூட்டத்தினர் நடை பவனியில் வருவதற்கு முயற்சி செய்தனர் தற்போது அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இப்படியான ஒரு செயல் நடைபெற இருப்பதாக எனக்கு முன் கூட்டியே ஓர் ஆசிரியர் தகவல் தந்திருந்தார். இவ்விடயம் உடனடியாக தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் இவ்விடயத்தினை ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்குத் கொண்டு வந்திருப்பதாக என்னிடம் கூறி இருந்தார்.
மேலும், இவ்விடயம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் மட்டக்களப்பில் காணப்படும் நிலைமை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் விளக்கியுள்ளார்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரிடமும் நேரடியாக நான் தெரிவித்துள்ளேன்.
மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய பணிப்புரைகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். நீதிமன்றத் தடை உத்தரவும் கூட பெறப்பட்டுள்ளது. எனவே எமது தமிழ் பேசும் மக்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும். என எமது தலைவர் சம்பந்தன் ஐயா என்னிடம் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக எமது பிரதிநிதிகளுக்கும் கூறப்பட்டுள்ளது.
குறித்த இரு தேரர்களை வைத்துக் கொண்டு மட்டக்களப்பில் ஓர் கலவரத்தை ஆரம்பிப்பதற்காக சில அடிப்படைவாதிகள், சில அரசியல்வாதிகள் பகீரதபிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் மத்தியில் வன்முறையைத் தூண்டி தமிழ் பேசும் மக்களை வன்முறையாளர்களாகக் காண்பிக்கத் துடிக்கின்றனர்.
இந்தச் சதி வலையில் வீழ்ந்து விடாமல் எமது மக்களை அறிவுபூர்வமாக வழி நடாத்த வேண்டியுள்ளது. எனவே எமது தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் மக்களுக்குச் சரியான வழிகாட்டல்களைச் செய்ய வேண்டியுள்ளது. சிறுபான்மையோர் உணர்ச்சிவயமான கருத்துக்களைத் தெரிவித்து அரசியல் செய்கின்ற காலமல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
தோல்வியடைந்த முன்னாள் ஆட்சியாளர்கள் அடிப்படை வாதிகளைக் கூடுதலாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அவர்களது முக்கியமான நோக்கம் தமிழர்களை வன்முறைக்குத் தூண்டுவதேயாகும். இதனால் தான் எமது சம்பந்தன் ஐயா தமிழ் பேசும் மக்களை அமைதிகாக்குமாறும், நிதானமாகச் செற்படுமாறும் கோரியுள்ளார்.
குறித்த தேரர்களின் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், சிலை வைத்தல் ஆகிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்புக்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என்பதை நமது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் மக்கள் நிதானமாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டிய காலம் இதுவாகும்.
தமிழ் பேசும் சமூகம் கூட்டமாகக் கூடும் போது கூட்டத்தினுள் புகுந்து வன்முறைகளை ஆரம்பித்து விட்டு, தமிழர்களே வன்முறையை ஆரம்பித்தனர் என்பதைக் காட்டுவதற்கும் திரை மறைவில் சதிகள் தீட்டப்பட வாய்ப்புகள் உள்ளன.
எனவே எமது மக்கள் கூட்டத்தின் மத்தியில் குள்ள நரிகளும் புகுந்து தமது வேலைத் திட்டங்களைச் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை நாம் அறிவுபூர்வமாக விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டியுள்ளது. அறிக்கை அரசியல்களை விடவும் ஆழமான அறிவு பூர்வமான அரசியல் பாதையில் தான் நமது மக்கள் பயணிக்க வேண்டும்.
உணர்ச்சிகளை நாங்கள் ஆளவேண்டும். உணர்ச்சிகள் எங்களை ஆளக்கூடாது. அடிப்படை வாதிகள் விடயத்தில் விழிப்புடன் செயற்பட்டும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வருகின்ற எமது எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, அமைச்சர் மனோக ணேசன் ஆகியோருக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.