வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் புனரமைப்பது யார்?

729 0

8b59e125-9fe6-407b-9731-3b95ae1eb57fகொழும்பின் புறநகர் பகுதியான கொஸ்கம பிரதேசத்தில் உள்ள – சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்தால் சேதமடைந்த பாடசாலைக் கட்டங்களை விரைவில் மீள அமைத்துக் கொடுக்கவுள்ளதாக இராணுவ தளபதி கிருஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாடநூல்கள், ஆடைகள், பாடசாலை பைகள் உள்ளடங்கலாக நிவாரணப் பொருட்களையும் மாணவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அது இராணுவத்தின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட ஒரு சில பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலைக் கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இராணுவ பொறியியல் பிரிவானது பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீள அமைப்பதற்காக அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவ தளபதி, குறித்த பணிகளை ஒரு வாரத்தில் நிறைவு செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் மாணவர்களின் தேவை குறித்து ஆராய்ந்து அவர்களிற்கான ஒதுக்கீடு குறித்து மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக 8 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச தெரிவித்துள்ளார்.ஆங்கில வார இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் ஒரு சில பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மீதி நான்கு பாடசாலைகள் எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஆரம்பத்தில் பாடசாலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படலாம் எனவும், எனினும் அவர்களை விரைவில் கல்வி நடவடிக்கைகளில் மீள ஈடுபடுத்துவோம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.ஆயுதக் களஞ்சிய வெடிப்பினால் சீருடைகளை இழந்த மாணவர்கள், நிற ஆடைகளுடன் சமுகமளிக்கலாம் எனவும் எதிர்வரும் சில நாட்களிற்குள் மாணவர்களிற்குத் தேவையான பொருட்கள் அமைச்சினால் வழங்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.மேலதிக நிவாரணங்களை வழங்குவதற்காக முதலமைச்சர், அரச அதிபர், கிராம சேவையாளர்கள் மற்றும் பெற்றோர்களுடனான சந்திப்பு நாளை திங்கட்கிழமை இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.அதேவேளை வடக்கு கிழக்கில் கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை புனரமைக்க இராணுவம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,சில பாடசாலைகளை அரசாங்கம் புனரமைப்பு செய்தாலும் யுத்தத்தினால் சேதமமைடந்த நுாற்றுக்கும் அதிகமான பாடசாலைகள் இன்னமும் புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது.

இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் வன்னியில் இருப்பதாகவும், ஆனால் அரசாங்கம் இதுவரை எந்த உதவிகளையும் வழங்கவில்லையென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.பாதிப்புக்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க விபரங்களை வழங்கினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவியளிப்பதாகவும் கடந்த ஏழு ஆண்டுகளின் பின்னர் கூறியிருக்கின்றார்.

இந்த நிலையில் கொஸ்கம பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இராணுவம் உதவியளிக்க முன்வந்துள்ளமை வேடிக்கையானது என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுமார் 729 பாடசாலைகள் யுத்தத்தினால் முற்றாக சேதமடைந்ததாகவும் மேலும் மேலும் 600 பாடசாலைகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இறுதி யுத்தத்தின்போது வன்னியில் மாத்திரம் 125 பாடசாலைகள் முற்றாக அழிவடைந்துள்ளது என்றும் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று கூறியிருந்தது.

ஆனால் இதன் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என இலங்கை ஆசியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
– துவாரகி சுந்தரமூர்த்தி –

Leave a comment