புதிதாக மன்னாரில் நடமாடும் பொலிஸ் படையணி

290 0

 

42இன்று காலை மன்னார் பிரதான பாலத்தடியிலுள்ள பொலிஸாரின் சோதனை மையத்தில் நடமாடும் பொலிஸ் படையணி புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், இலங்கை பொலிஸ்மா அதிபர் திணைக்களத்தின் சார்பாக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் உட்பட அரச அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், மத குருக்கள், மன்னார் மாவட்ட பொலிஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் புதிதாக பாலத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கமெராக்கள் பொருத்தப்பட்ட சோதனை மையத்தையும், பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மன்னார் பிரதேசத்தில் காணப்படும் பாதுகாப்பு அம்சங்களையும் அவர் ஆராய்ந்தார்.

அத்துடன் மன்னார் பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத போதை வஸ்து கடத்தல் அத்துடன் கடல்சார் மர கடத்தல்களை தடுப்பதற்கான நடமாடும் பொலிஸ் படையணி ஒன்றையும் ஆரம்பித்து வைத்து, அவ்வணிக்கு தெரிவு செய்யப்பட்டு பயிற்சி பெற்ற படையணி வீரர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், மன்னார் மாவட்டத்தில் போதை வஸ்து பாவனையும் போதை வஸ்து கடத்தலும் அதிகரித்து காணப்படுவதாகவும், இது மிகுந்;;;த கவலைக்குரிய விடயம் எனவும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகளை இல்லாதொழிக்கவே நடமாடும் பொலிஸ் படையணி புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் மன்னார் மாவட்டம் விரைவில் போதைபொருள் அற்ற மாவட்டமாக உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.