சுமந்திரன் இரட்டை வேடப்பேச்சு என பிய்த்து உதறுகிறார் கஜேந்திரகுமார்
ஒற்றையாட்சிக்கு இணங்கவில்லை என்று வெளியில் கூறிக்கொண்டு, முழு அளவில் ஒற்றையாட்சி முறைமைக்குத்தான் தமிழ்க் கூட்டமைப்பு இணங்கியிருக்கின்றது. நாடாளுமன்றில் சுமந்திரன் விடுத்த அறிவிப்பு அதைத் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் உணர்த்தி நிற்கின்றது. அவரின் உரையிலேயே அது அம்பலமாகியுள்ளது. இவ்வாறு கூறுகின்றார் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
நேற்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பில் இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அவர் காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார். அங்கு அவர் கூறியவை வருமாறு.
புதனன்று நாடாளுமன்றில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கொள்கை நிலைப்பாடு தொடர்பில் முக்கிய அறிவிப்புக்களை கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் விடுத்திருக்கின்றார். அவர் குறிப்பிடும் விடயங்கள் நடைமுறையில் வந்தால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை பாராதூரமான விளைவுகளும் பாதிப்புக்களும் ஏற்படப்போகின்றன.
2009 இல் போர் முடிந்த காலத்திலிருந்தே தமிழ்க் கூட்டமைப்பு எல்லாத் தேர்தல்களிலும் ஒரேவிடயத்தைக் கூறிவந்திருக்கின்றது. ஒரு சம~;டி ஆட்சி முறையைத் தாங்கள்கோரி வருகின்றனர் என்றும் அந்த ஆட்சி பகிரப்பட்ட இறைமையின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் அவர்கள் கூறிவந்தனர்.
அண்மைக் காலமாகக் கூட்டமைப்பின் தலைவர்கள் எல்லோரும், சம்பந்தன், சுமந்திரன் உட்பட அனைத்துத் தலைவர்களும் – அரசியல் தீர்வு குறித்துக் குறிப்பிடுகையில் தமிழ் மக்களின் இறைமையின் அடிப்படையில் அந்தத் தீர்வு அமைய வேண்டும் என்றே வலியுறுத்தி வந்துள்ளனர்.
இறைமையைப் பகிர முடியாது
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரை நாம் ‘பகிரப்பட்ட இறைமை’ என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் வேறு யாரிடமிருந்தும் இறைமையைப் பகிர்ந்து கொண்டுதான் எமக்கு இறைமை கிடைக்கும் என்ற கருத்துக்கு நாம் உடன்படவில்லை.
எமது கருத்து என்னவென்றால் – அதுதான் உண்மையில் தமிழ்த்தேசிய அரசியல் சிந்தனையின் ஆரம்பத்தில் இருந்து, 1951 முதல் தமிழரசுக் கட்சியின் உருவாக்கம் தொடக்கம் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுவரும் கருத்து – தமிழ்த் தேசத்துக்கு என்று தனித்துவமான ஓர் இறைமை இருக்கின்றது என்பதுதான்.
நாங்கள் ஒரு தேசம் என்ற வகையில் எமது இறைமை எங்களிடம்தான் இருக்கின்றது. அதை நாங்கள் இன்னொருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஒரு தேசமாக இருக்கும் மக்களிடம் இறைமை உண்டு. அது எங்களிடமும் உண்டு.
தமிழரசுக் கட்சியும் அதைத்தான் கூறிவந்தது
அதைத்தான் 1951 இல் இருந்து தமிழரசுக் கட்சியும் கூறிவந்திருக்கின்றது. தேசம் என்ற வகையில் எங்களிடம் பிறப்புரிமையாக இருக்கும் இறைமையின் அடிப்படையில் அந்த இறைமையைச் சிங்கள தேசம் என்ற இறைமையுடன் கூட்டி நாங்கள் ஒரு நாட்டுக்குள் இணைந்து வாழலாம் என்றுதான் அவர்கள் கூறிவந்திருக்கின்றார்கள். அந்த அடிப்படையில்தான் தமிழ்த்தேசிய அரசியல் இவ்வளவு காலமும் வளர்ந்து வந்தது.
கூட்டமைப்புடன் ஏன் முரண்பட்டோம்?
எப்படி 60 வருட காலமாக இறைமை தொடர்பாக நாம் கருதி வந்த நிலைப்பாட்டில் இருந்து 2009 யுத்த முடிவுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகி, புதிய கருத்து நிலைப்பாட்டைக் கூறமுற்பட்டபோதே நாம் அவர்களுடன் முரண்பட்டு வெளியே வந்தோம்.
வெளிவிவகார அமைச்சின் விவாதத்தில் தமிழ்ப்பிரதிநிதி கருத்துக் கூறுவது மிக முக்கியமானது. புதிய அரசமைப்பு உருவாக்கம், நல்லிணக்க முயற்சிகள், பொறுப்புக்கூறல் ஆகிய – தமிழர்களைப் பொறுத்தவரை முக்கியமான – மூன்று விடயங்கள் இந்த அமைச்சுடன்தான் தொடர்புபட்டுள்ளன.
அத்தகைய இடத்தில் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை சுமந்திரன் கூறுகின்றமையும் மிக முக்கியமானதாகும்.
அந்த உரையில் தமிழ் மக்கள் தாங்கள் தங்களின் இறைமையைக் கோரவில்லை என்றும், இறைமையைப் பகிரும்படி கூடக் கோரவில்லை என்றும் அவர் மிகத் தெளிவாகக் கூறி அந்த நிலைப்பாட்டை அங்கு பதிவு செய்கின்றார். இது மிகப்பாரதூரமான விடயம்.
“இறைமையைப் பகிர்ந்து கொள்ளலாம். அதில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. அப்படியிருந்தும் நாங்கள் அதைக்கூடக் கோரவில்லை” என்றும் அவர் மேலதிகமாகத் தங்களது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகின்றார். இது மிக முக்கியமான விடயம்.
தமிழ்க் கூட்டமைப்பு, தமிழ் மக்களிடம் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைக் கூறிவருகின்றது. அது – தாங்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது. அது மாத்திரமல்ல ‘ஒற்றையாட்சி’,‘சம~;டி’ என்ற சொற்கள் ஏதும் பாவிக்கக்கூடாதென்றும், ஆனால் தமிழ்க் கூட்டமைப்பும் மக்களும் ஒற்றையாட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் அது கூறிவருகின்றது.
ஒற்றையாட்சி – சமஸ்டி என்ன வித்தியாசம்?
ஒற்றையாட்சிக்கும் சமஸ்டிக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன?
ஒற்றையாட்சியில் இறைமை என்பது பகிரப்படாமல் ஓரிடத்தில் குவிந்திருக்கும் ஒற்றை – ஒன்று – ஓரிடம்
சமஸ்டியில் இறைமை பல இடங்களில் – மையங்களில் – தங்கியிருக்கலாம். ஓரிடத்தில் மட்டும்தான் என இறைமை குவிக்கப்பட்டிருக்காது.
சுமந்தரன், ஒற்றை ஆட்சியைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறினாலும் கூட நடைமுறையில் “இறைமையைப் பகிரந்தளிக்கும்படி நாங்கள் கேட்கவில்லை” என்று குறிப்பிடுகின்றமை மூலம் சட்ட ரீதியாக இலங்கை அரசுக்கும் நாடாளுமன்றுக்கும் ஒரு தெளிவான – திட்டவட்டமான – வாக்குறுதியை அளிக்கின்றார். பெயரில் இல்லாவிட்டாலும் ஓர் ஓற்றையாட்சிக்கு முழுமையாக நாம் இணங்கத் தயார் என்பதே அந்த வாக்குறுதி. அதுதான் அவரது அந்த பேச்சின் முக்கியத்துவம்.
கூட்டமைப்பு குத்துக்கரணம்
தமிழ் மக்களிடம் ஒவ்வொரு கட்டத்திலும் கூட்டமைப்பினர் கூறியவை என்ன?
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட சம்பந்தர் யாழ்ப்பாணம் வந்தபோது தமிழ்; மக்களின் இறைமையின் அடிப்படையில் தான் நாங்கள் தீர்வைக் கேட்கின்றோம் என்றுதான் கூறியிருந்தார்.
ஆனால் சுமந்திரனோ இந்தத் தனித்துவமான இறைமை என்ற விடயத்தைத் தாங்கள் கோரவேயில்லை என மிக ஆணித்தரமாக – உத்தியோகபூர்வமாக – அதுவும் நாடாளுமன்றத்தில் கூறுகின்றார்.
எங்கே போய் நாங்கள் எங்கள் கருத்துக்களை ஆணித்தரமாகக் கூறி, பதிவுசெய்து வாதம் செய்து சொற்சமர் புரிந்து விடயத்தைச் சாதிக்கவேண்டுமோ அங்கு போய்த்தான் இந்த நிலைப்பாட்டை அவர் கூறுகின்றார்.
தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை அடியோடு நிராகரித்து உதாசீனம் செய்யும் இந்தக் கருத்து கூட்டமைப்பு சார்பில் உத்தியோகபூூர்வமாக வந்திருக்கின்றது.
2010 பெப்ரவரியில் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, எமது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை நாம் ஸ்தாபித்த காலம் தொடக்கம் கடந்த தேர்தல் வரை நாம் எமது மக்களிடம் ஒரு விடயத்தைத் திரும்பத்திரும்பக் கூறிவந்தோம்.
தேர்தலுக்குக் கொள்கை பின்னர் குத்துக்கரணம்
ஆக, கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் மட்டும்தான் இந்தக் கொள்கை, கோட்பாடு பற்றிப் பேசும். தேர்தலுக்குப் பின்னர் அந்தக் கொள்கை, கோட்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டு, முற்றுமுழுதாக அதற்கு மாறாகச் செயற்படும் என்பதுதான்.
அப்படிக் கூட்டமைப்பின் செயற்பாடு அமையும் என்பதால், அதனை நம்பி ஏமாறாதீர்கள் என்றுதான் நாம் மக்களிடம் எடுத்துரைத்து வருகின்றோம்.
தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வுயோசனையை முன்வைத்தபோது மட்டும் அதைக் குழப்புவதற்காக அவ்வப்போது வடக்கு, கிழக்கு வந்து இறைமை குறித்தும் தமிழ்த் தேசம் குறித்தும் சம~;டி பற்றியும் பேசினார்கள்.
ஆனால், நடைமுறையில், பேசவேண்டிய உரிய இடத்தில் இந்த அனைத்துக் கொள்கைகளையும் கைவிட்டுத்தான் அவர்கள் பேசுகின்றார்கள்.
இதைத்தான் திரும்பத் திரும்ப எமது மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றோம்.
எமது எதிர்காலச் சந்ததியினருக்குத் துரோகம் இழைக்கும் ஓர் தீர்மானத்தை நாம் எடுக்காமல் கட்டுப்படுத்துவதற்கு முதலில், நாம் உண்மை நிலையைப் புரிந்துகொள்வேண்டும்.
சுமந்திரனின் அறிவிப்பு தமிழ்த் தேசியத்தையும் தமிழரின் பிறப்புரிமையான இறைமையையும் அடகுவைக்கும் நடவடிக்கை, இதை மக்கள் முழு அளவில் புரிந்துகொண்டால் தான் எமது எதிர்காலச் சந்ததியை அழிவில் இருந்துகாப்பாற்றலாம். என்றார்.