தைவான் அதிபருடன் அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத் நாட்டை தனிநாடாக அறிவிக்கக்கோரும் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புத்தமத துறவியான தலாய் லாமாவுக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் அளித்துள்ளது.
தனி திபெத் கோரிக்கையை முன்வைத்து உலகநாடுகளின் தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக தலாய் லாமா பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவ்வகையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை தலாய் லாமா சிலமுறை சந்தித்து தனது கோரிக்கை தொடர்பாக பேச்சு நடத்தியுள்ளார்.
ஆனால், திபெத் பிரிவினைக்கு அமெரிக்கா முழுமனதுடன் ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை. ஒன்றுபட்ட சீனாவின் ஒருபகுதியாக திபெத் இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக உள்ளது.
தலாய் லாமாவின் இந்த பிரச்சாரம் சீனாவுக்கு எரிச்சலூட்டி வருகிறது. தனி திபெத் கோரிக்கையை ஆதரிப்பவர்களை சீனா தனது எதிரியாகவே கருதுகிறது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப், சீனாவை சீண்டிப்பார்க்கும் விதமாக நேற்று தைவான் நாட்டு அதிபருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியதாக செய்தி வெளியாகியுள்ளது.
தொலைபேசி மூலம் தன்னை தொடர்புகொண்ட தைவான் அதிபர் ட்ஸாய் இங்-வென் தனது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அப்போது அமெரிக்கா-தைவான் இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
டிரம்ப்பின் இந்த குசும்புத்தனத்துக்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஒரே சீனா’ என்பதுதான் அமெரிக்கா-சீனா இடையிலான அரசியல் உறவுகளின் மூலக்கூறாக உள்ளது. தைவான் விவகாரத்தை கவனத்துடன் கையாள்வதுடன், இந்த உறவுகளை சீர்குலைக்கும் வகையில் ஏற்படக்கூடிய தேவையற்ற இடையூறுகளை விலக்கி, இருதரப்பும் ‘ஒரே சீனா’ என்ற கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.