சில்லரை தட்டுப்பாட்டை சமாளிக்க சேலத்திற்கு இன்று ஒரு கோடி மதிப்பிலான 10 , 5, 2 ரூபாய் நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் செலுத்தி வருகிறார்கள்.
அதற்கு பதிலாக பெரும்பாலான வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களிலும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வந்தாலும் அதனை வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில வங்கிகள் மட்டுமே வழங்கி வருகிறது.
இதனால் சில்லரை கிடைக்காமல் பொதுமக்கள் கடை, கடையாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. காண்டிராக்டர்கள் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாலும் தவித்து வருகிறார்கள். மேலும் எப்போது சில்லரை பிரச்சினை தீரும் என்றும் புலம்புகின்றனர்.
இந்த நிலையில் சேலத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு புதிய 10 , 5, 2 ரூபாய் நாணயங்கள், ஒரு ரூபாய் நோட்டுகள் ஒரு கோடி மதிப்பில் இன்று லாரி மூலம் கொண்டு வரப்பட்டன.
அட்டை பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்பட்ட ரூபாய்கள் மற்றும் நாணயங்கள் சேலம் கோட்டை ஸ்டேட் வங்கி, உள்பட பல பொதுத்துறை வங்கிகளில் பத்திரமாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நாணயங்கள் அனைத்தும் வருகிற திங்கட்கிழமை முதல் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில் சில்லரை தட்டுப்பாட்டை சமாளிக்க சேலத்திற்கு இன்று ஒரு கோடி மதிப்பிலான 10 , 5, 2 ரூபாய் நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய நாணயங்கள் வாடிக்கையாளர்களுக்கு திங்கட்கிழமை முதல் வழங்கப்படும் என்றார்.