கடந்த வாரம் சிறீலங்காவுக்கு வருகை தந்த அமெரிக்க மரைன் கொமாண்டோக்கள் கரும்புலிகளின் தாக்குதல் படகு பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர்.
சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கிலும், சிறிலங்கா கடற்படையுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கிலும், யுஎஸ்எஸ் சோமசெற் என்ற அமெரிக்க கடற்படையின் ஈரூடக போக்குவரத்துக் கப்பல் கடந்த22 ஆம் திகதி திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்தது.
இந்தக் கப்பலில் அமெரிக்க கடற்படையின் 11ஆவது மரைன் அணியும் பயணித்திருந்தது. மூன்று நாட்கள் அமெரிக்க மரைன் அணியினர் கடற்படையின் மரைன் அணியினருக்கு பயிற்சியளித்தனர்.
அத்துடன் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்குப் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை அருங்காட்சியகம் மற்றும் கடற்படைத் தளபதி பகுதியையும் அமெரிக்க மரைன்கள் சுற்றிப் பார்வையிட்டனர்.
கடற்படை அருங்காட்சியகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் தாக்குதல் படகுகளையும் அமெரிக்க மரைன்கள் பார்வையிட்டனர்.
அத்துடன், குறிப்பாக கடற்கரும்புலிகளின் தாக்குதல் படகு பற்றியும் அதன் செயற்றிறன் தொடர்பாகவும் அறிந்துகொள்வதில் அமெரிக்க மரைன்கள் ஆர்வம் காட்டியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடற்கரும்புலிகளின் தாக்குதல் படகுகளின் திறன் மற்றும் அவற்றினால் எதிர்கொண்ட நெருக்கடிகள் பற்றி அமெரிக்க மரைன் கொமாண்டோக்களுக்கு சிறிலங்கா கடற்படை அதிகாரிகள், விளக்கமளித்துள்ளனர்.