போதைப்பொருள் வரவைக் கட்டுப்படுத்த காவல்நிலையம் திறப்பு!

280 0

92816113_lankaபோதைப் பொருட்கள் நாட்டுக்குள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக கடற்படையினரும், காவல்துறையினரும் இணைந்து காவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, கடலோரக் காவல் நிலையமொன்று இன்று திறக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு காவல் நிலையத்திற்கு இரண்டு சுற்றுக்காவல் படகுகளும் கையளிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

கடல்வழியாக கெரோயின், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு நாட்டுக்குள் கொண்டுவருவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள ஒரு நடவடிக்கையாகவே இந்தக் கடலோரக் காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மன்னார் நகர்ப்பகுதியில் 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட கண்காணிப்பு நிலையம் ஒன்றும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்பகுதிக்குக் கொண்டுசெல்வதற்காக அண்மைக் காலமாக மன்னாரூடாக போதைப்பொருட்கள் கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் காவல்துறையினராலும் கடற்படையினராலும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற பின்னணியிலேயே மன்னாரில் இந்த கடலோர காவல் நிலையமும், கண்காணிப்பு மையமும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.