சாத்தான்குளத்தில் இரட்டை கொலை வழக்கில் தந்தை, மகனை விடிய விடிய போலீஸார் தாக்கியதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த ஜூன் மாதம் சாத்தான்குளம் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இருவரையும் போலீஸார் அடித்துக் கொலை செய்ததாக சாத்தான்குளம் கவால் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன்,ச சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி 2 வழக்குகள் பதிவு செய்து அனைனவரையும் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
ஸ்ரீதர் உட்பட 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பால்துரை உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்த வழக்கின் விசாரணையை முடித்து மதுரையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் சிபிஐ எஸ்பி வி. கே.சுக்லா 31 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.
சிபிஐ குற்றப்பத்திரிகை விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
சாத்தான்குளம் போலீஸார் ஜெயராஜை விசாரணைக்காக ஜூன் 19-ம் தேதி மாலை 7.30-க்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அது குறித்து கேட்ட பென்னிக்ஸை காவல் நிலையம் வருமாறு போலீஸார் அழைத்துள்ளனர். காவல் நிலையத்தில் போலீஸாருக்கும், பென்னிக்ஸூக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் பென்னிக்ஸை போலீஸார் தாக்கியுள்ளனர். தொடர்ந்து ஜெயராஜையும் தாக்கியுள்ளனர். இருவரையும் போலீஸார் பல மணி நேரம் தாக்கியுள்ளனர்.
இருவரையும் அரை நிர்வாணமாக மேஜையில் ஏற்றி குனிய வைத்து பின்பகுதியில் பலமாக தாக்கியுள்ளனர். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருப்பதை ஜெயராஜ் சொல்லியும் அவரை தாக்கியுள்ளனர். பின்னர் போலீஸாரைத் தாக்கியதாக இருவர் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரவு முழுவதும் தாக்கப்பட்டதால் இருவரின் உடலில் இருந்து ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது.
காவல் நிலைய சுவர், கழிப்பறை சுவர், லத்தி, மேஜைகள் என பல இடங்களில் தந்தை, மகன் இருவரின் ரத்தக்கறை படிந்துள்ளது. ரத்தக்கறையை சுத்தம் செய்ய சொல்லி தந்தை, மகனை போலீஸார் துன்புறுத்தியுள்ளனர்.
வீட்டிலிருந்து மாற்று உடைகள் எடுத்து வரச் சொல்லியுள்ளனர். இரு முறை தந்தை, மகன் உடைகள் மாற்றப்பட்டுள்ளது. மறுநாள் துப்புரவு தொழிலாளியை வரவழைத்து காவல் நிலையத்தில் படிந்திருந்த ரத்தக்கறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ரத்தக்கறைகளை பரிசோதித்த போது அது தந்தை, மகனின் உடலில் இருந்து வெளியேறியது என்பது மரபணு சோதனையில் உறுதியாகியுள்ளது.
சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் அலட்சியமாக செயல்பட்டு இருவரும் சிறையில் அடைக்கத் தகுதியானவர் என சான்றிதழ் வழங்கியுள்ளார்.
சிறையிலில் அடைக்கும் போதும் இருவரின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாக சிறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை பதிவேடுகள், மருத்துவ[ பரிசோதனை அறிக்கை, கிளைச் சிறை ஆவணங்களில் உள்ள தகவல்களில் முரண்பாடுகள் உள்ளன. விசாரணைகள் மற்றும் ஆவணங்கள், தடயங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸாருக்கு தந்தை, மகன் கொலையில் தொடர்பிருப்பதற்கு முகாந்திரம் உள்ளது.
இவ்வாறு சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.