பேரறிவாளனுக்கு மூட்டு நரம்பு வலி ஏற்பட்டதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஏற்கனவே அவர் 2 முறை பரோலில் வந்திருந்தார்.
இந்த நிலையில் 3-வது முறையாக பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 9-ந்தேதி சென்னை புழல் சிறையில் இருந்து பலத்த காவலுடன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கொரோனா தொற்று காரணமாக பேரறிவாளனை சந்திக்க வெளியாட்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மேலும் தினமும் காலை மற்றும் மாலையில் வீட்டிலேயே போலீசார் பேரறிவாளனிடம் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் பேரறிவாளனுக்கு மூட்டு நரம்பு வலி ஏற்பட்டது. அவர் அனுமதி கேட்டதை தொடர்ந்து நேற்று காலை கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாலை 4 மணிக்கு மீண்டும் பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.