இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று மருத்துவமனை திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை, வடபழனியில் போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் புதிய மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது. ஆஸ்பத்திரியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். நோயை ஆராய்ந்து, நோய்க்கான காரணத்தை ஆராய்ந்து, நோயை தீர்க்கும் வழிகளை ஆராய்ந்து, நோயாளியின் உடலுக்கு ஏற்றவாறு மருத்துவம் செய்வதே சிறந்தது என்று மருத்துவ பணி எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தைத் தந்தவர் திருவள்ளுவர். போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளை நிறுவி, மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. சென்னை அடையாறில் இந்த நிறுவனத்தின் மருத்துவனை ஏற்கனவே இயங்கி வருகிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது வடபழனியில் அனைத்து நவீன வசதிகளும் கொண்ட ஒரு புதிய மருத்துவமனையைத் தொடங்கியிருப்பது, தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அழைக்கப்படுவதை மேலும் வலுவாக்குவதாக அமைந்துள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். அனைவருக்கும் உயர்தர மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் மிகச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதனால்தான், இந்தியாவிலேயே தமிழ்நாடு மருத்துவத்துறையில் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.
உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் மட்டுமல்லாது, மிகச் சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதிலும், தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகின்றது. இன்றைக்கு தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் பெறுவதற்காக, வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். இதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று, அவை அனைத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம், வரும் ஆண்டுகளில் கூடுதலாக 1,650 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க அரசு சட்டம் இயற்றியுள்ளது.
சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்றின் பரவலை, மேலை நாடுகளை விட, குறுகிய காலத்தில் அதிகமாக கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்றியது நமது நாட்டு மருத்துவர்கள்தான் என்பது நமக்கெல்லாம் பெருமை.
போர்டிஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை, மக்களுக்கு சிறந்த தரமான மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவன மேலாண்மை இயக்குனர் டாக்டர் அஷூதோஷ் ரகுவன்ஷி, தலைமை இயக்க அதிகாரி அனில் வினாயக், சென்னை மண்டல இயக்குனர் டாக்டர் சஞ்சய் பாண்டே உள்பட பலர் கலந்து கொண்டனர்.