பதுளை- ஸ்பிரிங்வெளி, மேமலை பகுதியில் மரண வீடொன்றுக்குச் சென்றுவந்த, ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த மரண வீட்டில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஸ்பிரிங்வெளி, மேமலை தோட்டத்தைச் சேர்ந்த 69வயது பெண்ணொருவர், உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதி கிரியையில் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் கலந்துகொண்டுள்ளார்.
இவர் பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர், பதுளைக்குச் சென்று வந்தமை தெரியவந்ததையடுத்து ஹட்டன் பொலிஸார் உடனடியாக இவ்விடயத்தை பதுளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பதுளை பொலிஸார், ஸ்பிரிங்வெளி பகுதிக்கு சென்று மரணவீட்டுக்கு வந்த அனைவரையும் தனிமைப்படுத்தியுள்ளதுடன் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.