அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கரோனா; 90% நுரையீரல் பாதிப்பு, தீவிர கண்காணிப்பு: காவேரி மருத்துவமனை தகவல்

312 0

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கரோனா தொற்று பாதிப்பும், நுரையீரல் 90 சதவீதம் பாதிப்பு மட்டுமின்றி வேறு பல உடல்நல பாதிப்புகளும் உள்ளதால் எக்மோ சிகிச்சையில் தீவிரமாக கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 14-ம் தேதி விழுப்புரத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை இன்று அதிகாலை 4 மணிக்கு பின்னடைவை சந்தித்தது.

அதுமுதல் அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள அவரை முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் நேரில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

 

அமைச்சரின் உடல் நிலைக்குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

72 வயதாகும் அமைச்சர் துரைக்கண்ணு தீவிர மூச்சுதிணறல் காரணமாக அக்.13 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் அவர் பல்வேறு இணைய நோய் பாதிப்பில் உள்ளதும், சி.டி.ஸ்கேன் சோதனையில் அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. தற்போது அவர் எக்மோ கருவி உதவியுடன் அதிகப்பட்ச கவனிப்பில் உள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சரை முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் விஜய பாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் நேரில் வந்து உடல் நலன் விசாரித்தறிந்தனர். மருத்துவக்குழுவினர் அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குறித்து விளக்கம் அளித்தனர். அமைச்சரின் குடும்பத்தாரையும் தனிப்பட்ட முறையில் முதல்வர் சந்தித்து அமைச்சர் உடல் நிலைக்குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அமைச்சர் துரைக்கண்ணு தீவிரக்கண்காணிப்பில் உள்ளார்”.

இவ்வாறு காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.