கச்சதீவு அந்தோனியார் ஆலய விழாவில் இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி பங்கேற்போம் என்று, தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
கச்சதீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க தடையை மீறி கச்சதீவுக்கு செல்வோம் என்று இராமேசுவரம் மீனவர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் மற்றும் இலங்கையை சேர்ந்த பக்தர்கள், மீனவர்கள் பங்கேற்பது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கச்சதீவில் தற்போது புதிதாக புனித அந்தோனியார் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலய புனிதப்படுத்தும் விழா எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் உள்ளிட்ட 100 பேர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு அனுமதி கோரப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் இராமமோகனராவ், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினார். இந்நிலையில் டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரப், கச்சதீவில் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்றும், இலங்கை பக்தர்களுக்கும் அனுமதி தரப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையைமீறிப் பங்கேற்போம் என்று தமிழக மீனவர்கள் இன்று அறிவித்துள்ளனர்.