விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனைத் தாக்கி சமூக வலைதளங்களில் தன் பெயரில் உலா வரும் புகைப்படம் தான் வெளியிட்டது அல்ல என, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழருவி மணியன் நேற்று (அக். 25) வெளியிட்ட அறிக்கை:
“தொல். திருமாவளவனைத் தாக்கி ஒரு தரக்குறைவான விமர்சனத்தை வெளியிட்டு அதன்கீழ் என் படத்தையும் யார் போட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஐம்பதாண்டுகளுக்கு மேல் அரசியல் களத்தில் இயங்கும் நான் எந்த நிலையிலும் எவ்வளவு தவறான மனிதரையும் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து ஒரு வார்த்தையைக் கூடப் பேசியதுமில்லை; எழுதியதுமில்லை. சமூக ஊடகங்கள் ஏன் இந்த அளவு பாழ்பட்டுக் கிடக்கின்றன என்று எனக்குப் புரியவில்லை.
கழிப்பறை எழுத்துகள் விமர்சனம் என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்படுவதும் யாரும் யாரையும் இழிந்த வார்த்தைகளில் கீழிறங்கி விமர்சிக்கலாம் என்ற நிலை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதும் சமூக ஆரோக்கியத்தையே முற்றாகச் சிதைத்துவிடும் என்ற அச்சம் என்னை அலைக்கழிக்கிறது. வெறுப்பு அரசியல் எல்லை மீறிவிட்ட நிலையில் இந்த இழிந்த அரசியல் களத்தை விட்டே முற்றாக விலகி விடுவதுதான் நல்லது என்ற எண்ணம் என்னுள் எழுகிறது.
எந்த வகையிலும் மக்களுக்கு நன்மை தராத, சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கிற ஒரு தேவையற்ற பிரச்சினையை ஏன் திருமாவளவன் ஊதிப் பெருநெருப்பாக வளர்த்தெடுக்கிறார் என்று புரியவில்லை. இதற்குள் நுண்ணரசியல் இருக்கக்கூடும்.
ரஜினி அரசியல் சார்ந்து செயற்படும்வரை எந்த ஊடகத்திலும் என் கருத்தை வெளிப்படுத்துவதில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். காந்திய மக்கள் இயக்க முகநூலில் என் கையொப்பத்துடன் இடம் பெறும் கருத்துகள் மட்டுமே என்னைச் சார்ந்தவை. எந்தக் கேவலத்திலும் கீழிறங்கி எவரையாவது பழிதூற்ற வேண்டும் என்ற எண்ணம் என்னுள் என்றும் எழுந்ததில்லை. இழிந்த வாழ்க்கை வாழ்வதற்காக நான் அரசியலில் அடியெடுத்து வைக்கவில்லை”.
இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.