இந்தமுறை வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது, என கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
வேலூர் மாவட்டத்தில் முக்கியமான ஆறுகளான பாலாறு, மலட்டாறு, குண்டாறு, பொன்னையாறு மற்றும் கவுண்டன்யமகாநதி ஆகிய ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆந்திராவில் உள்ளது. ஆந்திராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. அங்குள்ள ஏரிகள், குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அவை நிரம்பி மோர்தானா அணைக்கு 984 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்தத் தண்ணீர் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோர்தானா அணை 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி அளவுக்கு தண்ணீர் வரத்தைத் தாங்கும் அளவில் கட்டப்பட்டுள்ளது. மோர்தானா அணை தண்ணீர் கவுண்டன்யமகாநதி ஆற்றிலும், வலது மற்றும் இடது புற கால்வாய்கள் மூலம் 38 கிலோ மீட்டர் தூரம் ஓடி 19 ஏரிகளை சென்றடைகிறது.
வேலூர் சதுப்பேரி ஏரி வரை மோர்தானா அணை தண்ணீர் கால்வாய் செல்கிறது. இம்முறை வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 102 ஏரிகள், 421 சிறு பாசன ஏரிகள், குட்டைகள் உள்ளன. அதில் 14 பொதுப்பணித்துறை ஏரிகள் நிரம்பி உள்ளன.
இந்த ஆண்டு குடிநீர் மற்றும் விவசாயிகளின் பல்வேறு பயிர் பாசனத்துக்கு தண்ணீர் பிரச்சினை வராது. மோர்தானா அணை பகுதியை பொதுமக்கள் சுற்றி பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரி மற்றும் குளம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குளிக்கவும், செல்பி எடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பல இடங்களில் ஆறு மற்றும் குளத்தில் பெரும் பள்ளங்கள் உள்ளதால், இந்தப் பள்ளங்களை அறியாத சிறுவர்கள், வாலிபர்கள் தண்ணீரில் இறங்கி சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், பெற்றோர் எச்சரிக்கையோடு தங்கள் பிள்ளைகளை தண்ணீர் உள்ள பகுதிகளுக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மோர்தானா அணை மற்றும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார், நீர்வள ஆதாரத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை ஆகியவை இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மோர்தானா அணை பகுதியில் வருவாய்த்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.