பி.சி.ஆர் சோதனையை மேலும் அதிகரிக்க உடன் நடவடிக்கை வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்து

216 0

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கையினை மேலும் அதிகரிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அரசாங்கதிற்கு அழைப்பு விடுத்தது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, கம்பஹா மாவட்டத்தில் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றின் தீவிரத்தை அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா தொற்றின் தற்போதைய அலை 13 மாவட்டங்களுக்கு பரவக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் எனவே இந்த தொற்றின் தீவிரத் தன்மையினை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அதன்படி, நாள் ஒன்றுக்கு செய்யும் பி.சி.ஆர். பரிசோதனைகள் எண்ணிக்கையினை 5000 வரை அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவமனைகளில் கிடைக்கும் வென்டிலேட்டர்கள் மற்றும் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே தமது கட்சி மற்றும் மருத்துவ நிபுணர்கள் விடுத்த ஆலோசனையை அரசாங்கம் புறக்கணித்திருப்பதாக சுட்டிக்காட்டிய ஐ.தே.க., கொரோனா தொற்றின் அதிகரிப்பிற்கு மத்தியிலும் 2000 ற்கும் குறைவான பி.சி.ஆர். பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த அதிகரிப்பு ஏற்படுவதற்கு முந்தைய மாதங்களில் பி.சி.ஆர் சோதனைகளை அரசாங்கம் 5,000 ஆக உயர்த்தியிருந்தால், கொரோனா வைரஸ் பரவுவதை சுகாதார அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடிந்திருக்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.