மைத்திரியின் அரசும் மாவீரர் தினமும்!- செல்வரட்னம் சிறிதரன்

359 0

uduththurai-3சுமார் எட்டு வருடங்களின் பின்னர், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டிருக்கின்றது. இது பலருக்கும் ஆறுதல் அளித்திருக்கின்ற ஒரு முக்கியமான சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது.

விடுதலைப்புலிகளினால் பிரகடனப்படுத்தப்பட்டு, மிகவும் முக்கியமான ஒரு தினமாகப் பின்பற்றப்பட்டு வந்த மாவீரர் தினத்தை, அனுட்டிக்கக் கூடாது. கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவுகூரக் கூடாது என்று முன்னைய அரசாங்கம் விடாப்பிடியாக இருந்து வந்தது.

இதனால் மாவீரர் தினம் அனுட்டிக்கப்படக்கூடாது என்ற கடுமையான தடையுத்தரவையும் அந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தது.

ஆயினும், மாவீரர் தினத்திற்கு எதிரான தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்து, இந்த வருடம் மாவீரர் தினத்தை மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்கள் சிலவற்றிலும், பொது இடங்களிலும் அனுட்டித்திருக்கின்றார்கள்.

தமிழ் மக்களைப் பொருத்தமட்டில், மாவீரர் தினம் என்பது முக்கியமான ஒரு நாளாகும். உளவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இத்தகைய முக்கியத்துவம் காரணமாகவே, இந்த வருடம் மாவீரர் தினத்தை மக்கள் அனுட்டித்திருப்பது பலருக்கு ஆறுதலை அளித்திருக்கின்றது. சிறு நம்பிக்கையை துளிர்க்கச் செய்திருக்கின்றது.

ஆயினும், மாவீரர் தினத்திற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை திடீரென நீக்கப்பட்டிருப்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள், விமர்சனங்களும் எழுந்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

மாவீரர் தினம்

போராட்ட இலக்கிற்காகத் தமது இன்னுயிர்களை ஈந்தவர்களை நினைவு கூர்ந்து போற்றுவதற்காகவே, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

இது, அவருடைய பிறந்த தினத்திற்கு அடுத்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தினத்தை மக்கள் மிகுந்த உணர்வுபூர்வமாக அனுட்டித்து வந்தார்கள்.

போராட்டத்தில் இணைந்து ஒரு கொள்கைக்காக – தமிழ் மக்களுக்கான அரசியல் விடுதலை என்ற உயரிய நோக்கத்திற்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து உறுப்பினர்களையும் பொதுவான ஒரு தினத்தில் ஒன்றிணைந்து நினைவுகூர வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த மாவீரர் தினம் ஒரு பொதுவான தினமாகக் குறிக்கப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகள் மட்டுமல்லாமல், அரசியல் நோக்கத்திற்காக ஆயுதம் ஏந்திப் போராடிய அனைத்து இயக்கங்களும், போராட்டத்தின்போது உயிரிழந்த தமது உறுப்பினர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செய்வதற்கான ஒரு பொது தினத்தை வெவ்வேறாக குறித்திருந்தன.

விடுதலைப்புலிகள், மாவீரர் தினம் என கொண்டிருந்ததைப் போன்று, ஈபிஆர்எல்எவ் தியாகிகள் தினம் என்றும், டெலோ தேசிய வீரர்கள் தினம் என்றும், புளொட் அமைப்பினர் வீரமக்கள் தினம் என்றும் தமக்கேற்ற வகையில் தினங்களைக் குறித்திருந்தார்கள்.

தெற்கில் ஆயுதமேந்திப் போராட்டம் நடத்திய ஜேவிபியினரும்கூட, உயிரிழந்த தமது உறுப்பினர்களை நினைவுகூர்வதற்கென இத்தகைய ஒரு தினத்தைக் குறித்து, இறந்தவர்களுக்கு வருடந்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இவற்றில் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமே உணர்வுபூர்வமானதாகவும், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் மிக்கதாகவும் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருக்கின்றது.

இதற்காக ஏனைய இயக்கங்களின் உயிரிழந்தவர்களுக்கான தினங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை என்று கூறுவதற்கில்லை.

அந்தத் தினங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த அமைப்புக்களுக்கும், அவற்றின் உறுப்பினர்களுக்கும் மிகவம் முக்கியமான தினமாக அமைந்திருந்தன. இன்னும் அமைந்திருக்கின்றன.

மாவீரர் தினத்தில், மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்கள் ஒன்றுகூடி, உயிரிழந்த தமது உறவுகளை மிகுந்த பாசத்துடன் நினைவுகூர்ந்து, கதறி அழுது, கண்ணீருடன் கலந்த மலர்களையும், மலர் மாலைகளையும் கல்லறைகளில் சூடி அஞ்சலி செலுத்துவார்கள்.

அந்தந்த கல்லறைகளின் முன்னால் கூடுகின்ற குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும், உயிரிழந்தவர்களுடன் கழித்த நாட்களையும், நிகழ்வுகளையும், அவர்களின் நினைவுகளையும் அவர்களுடைய செயற்திறன்களையும் எடுத்துக் கூறி பகிர்ந்து கொள்வார்கள்.

அப்போது, அவ்விடத்தில் ஏற்படுகின்ற உணர்வு எழுச்சியும், கூடியிருப்பவர்களின் மனங்களில் பொங்குகின்ற அன்புப் பிரவாகமும், உற்றவர்களின் இழப்பினால் அவர்கள் அடைகின்ற துன்பத்தின் வெளிப்பாடும், – சூழ்ந்திருப்போரையும், பார்த்திருப்போரையும் மெய்சிலிர்க்கச் செய்யும். மனங்களை உருக்கி கண்ணீர் மல்கச் செய்துவிடும்.

மொத்தத்தில் பல்வேறு உணர்வுகள் ஒரு கலவையாக எழுச்சி பெற்று, அந்தச் சூழல் புனிதம் மிகுந்த புதியதோர் அனுபவத்தை அளிப்பதாக இருக்கும்.

மாவீரர் தின நிகழ்வின்போது, மணி ஒலிக்கப்பட்டு, ஆறு மணி ஐந்து நிமிடங்களாகும்போது, மாவீரர்களுக்கான சுடர் ஏற்றி, அஞ்சலி செலுத்தப்படும். இந்த நிகழ்வில் மணி ஒலிப்பதும் சுடரேற்றப்படுவதும் மிகவும் முக்கியமான அம்சங்களாகும்.

இறந்தவர்களுக்கான அஞ்சலி உரை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நிகழ்த்தப்படும்.

அந்த உரை வெறுமனே அஞ்சலி உரையாக இருக்கமாட்டாது. விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கை விளக்கமாக அவர்களுடைய போராட்டம் மற்றும் அரசியல் செயற்பாடுகளின் முன்னறிவித்தலாகவும் அமைந்திருக்கும்.

இதன் காரணமாகவே மாவீரர் தினம் உளவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாகக் கருதப்படுகின்றது.

மாவீரர் தினத்தில் மக்கள் ஒன்று கூடி தமது உறவுகளை நினைவுகூர்ந்ததன் மூலம், தனிப்பட்டவர்கள் அல்லாமல், ஒட்டுமொத்த சமூகமே தனக்கு ஏற்பட்டிருந்த – தனக்கு ஏற்பட்டுக்கொண்டிருந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கும், சமூகம் தன்னை உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.

ஏனெனில் யுத்த மோதல்களின் போது பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருந்தனர். இதனால் தமிழ் சமூகம் பெரும் எண்ணிக்கையானவர்களை இழந்து சோகமுற்றிருந்தது. மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கும் சமூகம் தன்னை சுதாகரித்துக் கொள்வதற்கும் மாவீரர் தினம் உளவியல் ரீதியான வடிகாலாகப் பயன்பட்டிருந்தது.

இவ்வாறு முக்கியத்துவம் பெற்றிருந்த மாவீரர் தினத்தை அனுட்டிக்கக் கூடாது. கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவுகூரக் கூடாது என்று முன்னைய அரசாங்கம் தடை செய்திருந்தது.

அந்த வகையில் மோசமான தடையுத்தரவுக்குப் பின்னர் இடம்பெற்றுள்ள 2016 ஆம் ஆண்டு மாவீரர் தினம் பல வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

மோசமான அடக்குமுறை

பல வருடங்கள் நீடித்த இறுக்கமான தடையின் பின்னர் மாவீரர் தினம் அனுட்டிக்கப்பட்டிருப்பது ‘உளவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வரவேற்கத்தக்கது.

இது ஒரு முன்னேற்றகரமான மாற்றம்’ என்று பிபிசியிடம் பேசிய யாழ் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை நிபுணரும் பேராசிரியருமாகிய தயா சோமசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் அதில் எதிர்நோக்குகின்ற கஷ்டங்கள் உணர்வுகள், நெருக்கீடுகள் போன்றவற்றில் இருந்து மீண்டு வருவதற்கு முன்னர் நடந்த சம்பவங்களை நினைவுகூர்வது அவசியமாகும்.

அந்த வகையில் உளவியல் ரீதியாக இதனை ஒரு முக்கிய அம்சமாக நாங்கள் கருதுகிறோம் என்றார் தயா சோமசுந்தரம்.

அது ஏன் முக்கியம் என்பதையும் அவர் விபரித்துள்ளார்.

பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு (recovery), இயல்பான உளவியல் நிலையை அடைவதற்கு நினைவுகூர்தல் அவசியம்.

நடந்தவற்றை நினைவுகூர்வதன் ஊடாகத்தான் பாதிப்புகளுக்கு உள்ளாகியவர்கள், முன்னர் நடந்த சம்பவங்களுக்கு ஓர் அர்த்தம் கொடுத்து, மனதில் ஓர் ஆறுதல் அடைய முடியும்.

நடந்து முடிந்த பாதிப்புகள் பற்றி ஆரோக்கியமான ஒரு நிலைப்பாட்டிற்கு வருவதற்கு நினைவுகூர்வதென்பது உதவியாக இருக்கும்.

துன்பமான நிலையில் இருந்து தங்களை மீட்டுக் கொள்வதை உளவியல் ரீதியாக ஒரு வகையில் ஜுரணித்தல் என்று சொல்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டிருந்த போதிலும், ‘நினைவுகூரல் நிகழ்வுகள் நடைபெறாதவாறு தடை செய்யப்பட்டிருந்ததை, பெரியதொரு அடக்குமுறை என்று சொல்லலாம்’ என்று தயா சோமசுந்தரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய சம்பவங்களையும், அவற்றால் ஏற்பட்ட இழப்புக்களையும் நினைவுகூர்ந்து, வருந்தி, தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்வதென்பது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையாகும்.

அதனை எவரும் மறுக்க முடியாது. தடுக்க முடியாது. அவ்வாறு செய்வது மோசமான மனித உரிமை மீறலாகும்.

ஆனால் முன்னைய அரசாங்கம் இத்தகைய தடையை விதித்து, மாவீரர் தினத்தை மட்டுமல்ல. யுத்தம் முடிவுக்கு வந்த மே 18 ஆம் திகதியைக் கூட அனுட்டிக்கவிடாமல் தடை செய்திருந்தது.

இதனால் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் சிக்கி பெருந் துயருற்றவர்கள் தமக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் இழப்புகளையும் நினைவுகூர்ந்து ஆறுதல் அடையவும் ஆற்றுப்படுத்திக் கொள்ளவும் முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

யுத்தத்தில் வெற்றி பெற்ற அரச படைகளுக்காக பல்வேறு இராணுவ வெற்றிச் சின்னங்கள் யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு, இராணுவத்தினரால் அவைகள் பராமரிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன.

ஆயினும் தமது சொந்த மண்ணில், சொந்தக் கிராமங்களில் யுத்த மோதல்கள் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரவோ அல்லது யுத்த மோதல்களில் உயிரிழ்ந்த விடுதலைப்புலிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த துயிலும் இல்லங்களைத் தொடர்ந்து பேணவோ முடியாதவாறு கடுமையான அடக்குமுறையை அரசாங்கம் பிரயோகித்திருந்தது.

விடுதலைப்புலிகளினால் உயிரிழந்த உறுப்பினர்களை அடக்கம் செய்வதற்காக வடக்கிலும் கிழக்கிலும் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கல்லறைகளை இராணுவத்தினர் கனரக வாகனங்களைப் பயன்படுத்தி இடித்து அழித்து, அந்த இடிபாடுகளை அள்ளிச்சென்று பொது வீதிகளில் பரப்பியிருந்தார்கள்.

இதனால் அடக்கம் செய்யப்பட்ட சடலங்களின் எச்சங்கள்கூட வீதிகளில் பரவிக்கிடக்கக் காணப்பட்டது. ஆயினும் விடுதலைப்புலிகளினால் மிகவும் புனிதமாக உயர்ந்த நிலையில் வைத்து பூசிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களின் அந்த இடிபாடுகளை அகற்றவோ அல்லது வேறு ஏதும் செய்யவோ எவராலும் முடியாமல் போயிருந்தது.

இவ்வாறு இடித்து அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்திருந்த இடங்கள் பலவற்றில் இராணுவத்தினர் தமது முகாம்களை அமைத்து நிலைகொண்டிருக்கின்றார்கள்.

அவற்றை விட்டுச் செல்ல மறுக்கின்றார்கள்.

அரசாங்கத்தினால் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூர்வதென்பது விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையாகும் என்று அரசாங்கம் வர்ணித்திருந்தது.

எனவே, உயிரிழந்த விடுதலைப்புலி உறுப்பினர்களாகிய மாவீரர்களை பொது இடங்களாயினும்சரி, மாவீரர் துயிலும் இல்லங்களாயினும்சரி, அதற்கு அனுமதி கிடையாது என இறுக்கமான தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனை மீறிச் செயற்பட்டவர்கள் பலர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பயங்கராவதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர், இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள் என்பதும் நினைவுகூரத்தக்கது.

மாவீரர் தினத்துக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு காரணமாக ஒரு தடவை, நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தன்று, கார்த்திகை மாதத்தில் வருகின்ற இந்துக்களின் முக்கிய தினமாகிய கார்த்திகை தீபத் திருநாள் அமைந்திருந்தது.

மாவீரர் தினத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகிய சுடரேற்றல் செயற்பாடு காரணமாக அந்த கார்த்திகைத் தீபத் திருநாளன்று மாலையில் ஆலயங்களில் மணி அடிக்கக்கூடாது விளக்குகள் ஏற்றக் கூடாது என இராணுவத்தினர் ஆலய நிர்வாக சபைகளுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தார்கள்.

இதனால் ஒருபோதும் இல்லாத வகையில் அந்த வருடம் ஒளி மயமாகத் திகழ வேண்டிய தீபத்திருநாள் அன்று வடக்கில் ஆலயங்கள் இருண்டு கிடந்தன. ஆலய மணிகளும் ஒலிக்கவில்லை. மாவீரர் தினத்துக்கு எதிரான அடக்குமுறை அந்த அளவுக்கு மோசமாக இருந்தது.

நிபந்தனையுடன் கூடிய அனுமதி

மாவீரர் தினத்தை அனுட்டிப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னைய ஆட்சியிலும் பார்க்க, வலுவாக முன்வைக்கப்பட்டிருந்தது.

அத்தகைய அனுமதி ஏன் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு பல்வேறு விளக்கங்களும் காரணங்களும்கூட முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கோரிக்கையின் நியாயத்தன்மையை ஏற்றோ அல்லது நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் நோக்கம், அரசியல் இலாபம் கருதியோ – ஏதோ ஒரு வகையில், மாவீரர் தினத்தை அனுட்டிப்பதற்கான அனுமதி அதிகாரப் பற்றற்ற வகையில் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அனுமதியும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியாகவே அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரர் தினத்தின்போது விடுதலைப்புலிகளைக் குறிப்பிடத்தக்க வகையிலான சின்னங்கள் எதுவும் இருக்கக் கூடாது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளையின் உருவப்படம் சீருடையிலோ அல்லது சிவிலுடையிலோ இருக்கக் கூடாது.

ஏனையவர்களின் உருப்படங்களும் சீருடையில் இருக்கக் கூடாது. விடுதலைப்புலிகளின் கொடி அல்லது அவர்களுடைய சின்னம் எதுவும் வைக்கப்படக் கூடாது. அது மட்டுமல்லாமல், விடுதலைப்புலிகளின் எழுச்சிப் பாடல்களும் ஒலிபரப்பப்படக் கூடாது.

இத்தகைய நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த மாவீரர் தினம் நடந்தேறியிருக்கின்றது.

இது பாதிக்கப்பட்டவர்களின் மனங்கள் ஆறுதல் அடைவதற்கும் அவர்கள் பாதிப்புகளில் இருந்த ஆற்றுப்படுத்தப்படுவதற்கும் ஏற்புடையதல்ல என்பது உளவியல் ரீதியான வாதமாகும்.

ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அர்த்தமுள்ள வகையில் அவர் நினைவுகூர்வதன் ஊடாகவே அவர் ஆறுதல் அடையவும் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

‘நாங்கள் வரையறைப்படுத்தி, நீங்கள் இதை இப்படித்தான் நினைவுகூர வேண்டும். இதை மட்டும்தான் செய்ய வேண்டும். இந்த நாளில்தான் செய்ய வேண்டும். இப்படித்தான் செய்ய வேண்டும் என்றில்லாமல், மக்கள் தங்களுடைய கலாசாரம், நம்பிக்கைகள், விழுமியங்கள் போன்றவற்றுடன் ஏற்கக் கூடிய வகையில்தான் இந்த நிகழ்வுகள் நடக்க வேண்டும்.

அப்போதுதான் அதற்கு ஓர் அர்த்தம் இருக்கும்’ என உளவியல் நிபுணர் தயா சோமசுந்தரம் பிபிசியுடனான பேட்டியில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, ஆட்சி மாற்றத்தின் பின்னர், கடந்த வருடம் சிறிய அளவில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் இந்த வருடம் முன்னேற்றகரமான முறையில் இடம்பெற்றிருக்கின்றது.

இதன்போது, கைவிடப்பட்டு பாழடைந்து கிடந்த மாவீரர் துயிலும் இல்லங்களைத் துப்பரவு செய்து அங்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருக்கின்றார்கள்.

இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையாகவே பலராலும் நோக்கப்படுகின்றது.

சந்தேகங்கள்

இருப்பினும் நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்திடமும், ஐநா மன்றத்திடமும், நற்பெயரைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த மாவீரர் தினத்துக்கு அனுமதி வழங்கும் செயற்பாட்டை, அரசியல் ரீதியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றதா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்கள் பலவற்றில் எழுந்திருக்கின்றது.

மக்கள் தமக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு உதவியாக உளப்பூர்வமான முறையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பவர்கள் மத்தியிலேயே இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

அரசியல் ரீதியான காரணத்திற்காக பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைசார்ந்த விடயங்களைப் பயன்படுத்துகின்ற போக்கிற்கு இடமளிக்கப்படக் கூடாது என்பது அவர்களுடைய நிலைப்பாடாகக் காணப்படுகின்றது.

நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள சூழலில், மாவீரர் தினத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியானது அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என பேராசிரியர் தயா சோமசுந்தரம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

நிலைமாறுகால நீதிக்கான செயற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தமக்கு உகந்த வகையில் நினைவுகூர்ந்து ஆறுதலடைய வழி செய்யப்பட வேண்டும் என்பது முக்கிய அம்சமாகும்.

அந்த வகையில் இந்தச் செயற்பாடு குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்ற மக்களின் வாழ்க்கை சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மேம்படுவதற்கு அரசாங்கம் இன்னும் எத்தனையோ காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது.

எனவே, மிக மோசமான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த மாவீரர் தினத்தை அனுட்டிப்பதற்குக் கிடைத்துள்ள அனுமதியையடுத்து, பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிட்டது என்றோ அல்லது எல்லா பிரச்சினைகளுக்கும் இலகுவில் தீர்வு கிட்டிவிடும் என்றோ கூறிவிட முடியாது.

பல்வேறு அரசியல் நோக்கங்கள், அரசியல் வியூகங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளின் உள்ளார்ந்த நிலைப்பாடு, அவற்றின் உண்மைத் தன்மை என்பவற்றைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை ஏற்படுத்தத் தக்க வகையில் அவைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டியது தமிழர் தரப்பு அரசியல் தலைமைகளின் தலையாய கடமையாகும்.

இந்தக் கடமையைக் கோட்டைவிட்டுவிட்டு, மேலெழுந்தவாரியாக கிடைத்தவைகள் எல்லாம் எல்லா வகையிலும் சிறப்பானது என்ற அடிப்படையில் சுய அரசியல் நோக்கம் கருதி அல்லது சுயஅரசியல் இலாபத்தை இலக்கு வைத்து நடந்து கொள்ளக் கூடாது என்பதைக் கருத்திற் கொள்வது நன்மை பயக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

செல்வரட்னம் சிறிதரன்