பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வலிமையான ஆயுதம் கண்ணீர்தான்! சிங்களப் பேரினவாதத்துக்கு இது புரிகிறது. அதனால்தான் நவம்பர் 27ம் தேதி தமிழர் தாயகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கடலலையெனத் திரண்ட மக்களின் கண்ணீரைக் கண்டு மிரள்கிறது.
சென்ற வாரம் வரை ‘மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு எத்தனைப் பேர் வருகிறார்கள் என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்’ – என்று நக்கலடித்துக் கொண்டிருந்தது இலங்கை. அதன் முகத்திலடிப்பதைப் போல் நவம்பர் 27ம் தேதி ஈழத் தாயகத்தின் மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்திலும் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் திரண்டனர். கண்ணீர் மல்க மாவீரர்களுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைப் பார்த்துத்தான் அதிர்ந்து போயிருக்கிறது இலங்கை.
‘விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தியவர்களைக் கைது செய்’ என்கிற கூக்குரல் கொழும்பிலிருந்து தொடர்ச்சியாக எழுவதைப் பார்க்கிறபோது மாவீரர் நாளில் எமது ஈழத்துச் சொந்தங்கள் செலுத்தியிருக்கிற நன்றிக்கடன் சிங்களப் பேரினவாதத்தின் குரல்வளையைப் பிடித்து நெறித்திருப்பதை உணர முடிகிறது.
தாய்மண்ணுக்காகத் தங்களை அர்ப்பணித்த அந்த மாவீரர்களை இந்த இனம் எந்தக் கணத்திலும் மறவாது – என்று அடிக்கடி குறிப்பிடுபவன் நான். அது தாயகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் வாழ்கிற ஈழத்துச் சொந்தங்கள் மீதான எனது நம்பிக்கை. அந்த நம்பிக்கை பொய்த்துவிடவில்லை.
புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகச்சிறப்பாக நடந்திருந்தாலும் அதையெல்லாம் மிஞ்சுவதாக இருந்திருக்கிறது – சொந்தத் தாய்மண்ணில் விடுதலைப் புலிகளுக்குத் தரப்பட்டிருக்கிற மரியாதை!
தமிழீழத்தின் நிர்வாகத் தலைநகராக இருந்த கிளிநொச்சியில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் 27ம் தேதி நடந்த மாவீரர் நாள் நிகழ்வு ஒன்றுபோதும்… ஈழம் முழுக்க என்ன நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள!
‘மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த கனகபுரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களுடனும் தீபங்களுடனும் திரண்டிருந்தனர்….
சரியாக மாலை 06.03க்கு மணி ஒலித்தது…..
06.05க்கு விளக்குகள் ஏற்றப்பட்டன….
மாவீரர் துயிலுமில்லத்தில் முன்பு நிலைகொண்டிருந்த ராணுவம் மாவீரர்களின் நினைவுக்கற்களையும் கல்லறைகளையும் இடித்து அகற்றிவிட்டிருந்ததால் தங்கள் உறவுகளைப் புதைத்த இடங்களைத் தேடிப் பிடித்து மக்கள் அஞ்சலி செலுத்தியதைப் பார்க்க முடிந்தது…..’ – என்று கனகபுரம் நிகழ்வை விவரிக்கின்றன வீரகேசரி முதலான ஊடகங்கள்.
‘ஏழு ஆண்டுகளுக்குப் பின் என் மகனுக்கு அவனுடைய நினைவிடத்தில் மீண்டும் அஞ்சலி செலுத்துவேன் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. 2007 வரை எப்படி நடந்ததோ அதேஅளவு எழுச்சியுடன் மாவீரர் நாள் நடக்க வேண்டும். என்னுடைய இந்த ஆசையும் நிறைவேற வேண்டும். அந்த நாள் மிகத் தொலைவில் இல்லை என்பதை உணர்கிறேன்’ என்று விடுதலைப் புலி வீரன் ஒருவனது தாயார் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டதைப் பதிவு செய்திருக்கிறது வீரகேசரி.
பத்து ஆண்டுகளுக்கு முன் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நேரில் தரிசித்த தருணத்தில் எப்படி மெய்சிலிர்த்தேனோ அதே அளவுக்கு வீரகேசரி செய்தியைப் படிக்கும்போதும் சிலிர்க்கிறது எனக்கு!
வன்னி மண்ணில் விடுதலைப் புலிகளின் ஆட்சி நடந்த போது மாவீரர் நாள் நிகழ்வுகள் எப்படி நடந்ததோ அப்படித்தான் நடந்திருக்கிறது இப்போதும்! கம்பீரமாக ஒலித்த மணியோசையுடன் நிகழ்வுகள் ஆரம்பித்திருக்கின்றன.
களத்தில் மட்டுமின்றி மற்ற நடவடிக்கைகளிலும் திட்டமிட்டுச் செயல்படுவது விடுதலைப் புலிகளின் வழக்கம். மாவீரர் நாள் நிகழ்வும் அப்படித்தான்! பிரபாகரனின் பெருமதிப்புக்கு உரியவராக இருந்த பெரியவர் பொன்.தியாகம் தான் மாவீரர் பணிமனையின் பொறுப்பாளராக இருந்தார்.
பிரபாகரனின் மாவீரர் நாள் உரை ஐந்து மணி வாக்கில் தொடங்கி மிகச் சரியாக மாலை 06.02க்கு முடிவடைவது வழக்கம். அவரது உரை முடிந்தபின் 06.03க்கு மணி ஒலிக்கும். அந்த மணியோசைக்குப் பின்னரான நிசப்தத்தைக் கிழித்தபடி களம் கண்ட கவிஞன் புதுவை ரத்தினதுரையின் ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே’ பாடல் ஒலிக்கும். புதுவையின் பாடல் நம்முடைய நரம்புகள் ஒவ்வொன்றுக்குள்ளும் சிலிர்ப்பையும் உயிர்ப்பையும் செலுத்துகிற ஆற்றல் மிக்கது.
‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே!
இங்கு கூவிடும் எங்கள் குரல்மொழி கேட்குதா
குழியினுள் வாழ்பவரே?
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்…..’
என்று தொடங்குகிற புதுவையின் பாடல்
‘எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்…….’
என்று தொடர்கிறது.
நவம்பர் 27 அன்று கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் புதுவையின் பாடல் ஒலித்தபோது அங்கே திரண்டிருந்த மக்கள் உணர்ச்சியின் விளிம்பில் நின்று கொண்டிருந்ததைப் படத்துடன் செய்தியாக்கி இருக்கிறது வீரகேசரி.
‘எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்…….’
என்கிற பாடல் வரிகள் ஒலித்தபோது அதைக் கேட்டுக் கதறியழுத சகோதரிகளின் உணர்ச்சியையும் நெகிழ்ச்சியையும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது வீரகேசரி.
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் என்ன நடந்ததோ அதுதான் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் அனைத்துப் பகுதிகளிலும் நடந்திருக்கிறது. வெறிபிடித்த ராணுவத்தால் இடிக்கப்பட்டுத் தூர்க்கப்பட்டிருந்த அத்தனை மாவீரர் துயிலுமில்லங்களையும் தாங்களாகவே புனரமைத்து தாய்மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள் தமிழீழ மக்கள்.
‘யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதாகத் தெரிவித்துவிட்டு வடக்கு கிழக்கில் ராணுவ முகாம்கள் முன் விடுதலைப் புலிகளின் பதாகைகளை ஏந்திச் சென்றிருக்கிறார்கள். இது இனவாதத்தை வலுப்படுத்துகிற செயல். புலிகளை நினைவு கூர்ந்தவர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குமுறுகிறார் மகிந்த ராஜபக்சவின் கைத்தடியான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில. பகிரங்கமாக இனவெறியைத் தூண்டிவிடுவதில் வல்லவரான அவரைப் போன்றவர்கள் இனவாதம் பற்றியெல்லாம் பேசுவதுதான் கொடுமை.
உதய கம்மன்பிலவை விடுங்கள்….
நம்முடன் சேர்ந்தே நடமாடுவதாகக் காட்டிக்கொள்கிற நண்பர்கள் மட்டும் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்களா என்ன!
‘மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த பிறகாவது மைத்திரிபாலா அரசின் ஜனநாயகத்தால்தான் வடகிழக்கில் மாவீரர் நாளை முன்புபோல் அனுஷ்டிக்க முடிந்தது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா’ என்று வம்புக்கு இழுக்கிறார் ஒரு நண்பர்.
போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து சிங்கள ராணுவத்தைக் காப்பாற்றியே ஆக வேண்டிய இக்கட்டான நிலையில் நின்றுகொண்டிருக்கிறார் மைத்திரிபாலா. கொலைவெறி பிடித்த ஒரு கொடூரமான ராணுவத்தை சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றியே ஆகவேண்டும் என்கிற நிலை மைத்திரிக்கு! ராணுவத்தைக் காப்பாற்றினால்தான் அவரால் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
போர்க்குற்ற விசாரணையைத் திசை திருப்புவதற்காகத்தான் ‘நல்லிணக்கம்’ என்கிற வார்த்தையைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார் மைத்திரி. தமிழர்களுக்கு எந்தவிதத்திலும் அரசாங்கம் தடையாக இருக்கவில்லை என்று பறைசாற்ற மாவீரர் நாளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். போர்க்குற்ற விசாரணை என்கிற வார்த்தையையே குழிதோண்டிப் புதைக்கிற வரை இந்தப் போலி நாடகமெல்லாம் தொடரும்.
ஒருபுறம் தமிழர்களுக்கு ஜனநாயக உரிமைகள் தரப்பட்டிருப்பதைப் போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கிவிட்டு அதைக்காட்டியே போர்க்குற்ற விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைக்க மைத்திரி முயல்கிறாரே…. இதற்குப் பெயர்தான் நயவஞ்சகம். என்ன நடந்தது என்பதையும் என்ன நடக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளாமல் ஜனநாயக உரிமைகளை மைத்திரி அரசு மதிப்பதாக யாரும் பிழையாகக் கருதிவிடக் கூடாது.
இன்னொருபுறம் ‘சர்வதேசம் நம்மை ஏமாற்றிவிட்டது’ என்று தமிழகத்திலிருந்து பிரச்சாரம் செய்கிற நண்பர்கள். ஈழத்து உறவுகளை சர்வதேசத்தைக் காட்டிலும் கடுமையாக ஏமாற்றியவர்கள் தாய்த் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம். சர்வதேசத்தைக் குறைசொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கிறது?
8 கோடித் தமிழனின் கோழைத்தனமில்லாமல் வேறெது ஒன்றரை லட்சம் ஈழத்து உறவுகளைக் கொன்றது? கொல்லப்பட்ட தமிழருக்கு இன்றுவரை நீதி கிடைக்காததற்கு ‘நமக்கெதுக்கு வம்பு’ என்கிற நமது பொறுப்பின்மையன்றி வேறெது காரணம்?
ஈழத்தில் நடந்தது சர்வநிச்சயமாக ஒரு இனப்படுகொலை. சீனா அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தயவுடன் அந்த இனப்படுகொலையை மூடிமறைத்தது இலங்கை. ‘நடந்தது போர்க்குற்றம்தான்’ என்று சாதித்தது. சர்வதேசத்தை நம்பவைக்க போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேசப் பங்களிப்பை வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தானும் சேர்ந்தே கொண்டுவந்தது. இது ஒரு கட்டம்.
இப்போது நடப்பது மைத்திரி நடத்தும் நாடகத்தின் அடுத்த காட்சி. தானே கொண்டுவந்த போர்க்குற்ற விசாரணை தீர்மானத்தைக் குழிதோண்டிப் புதைக்க தீவிரமாக முயல்கிறார். மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்ற இனப்படுகொலைக் குற்றத்தையே மூடி மறைக்க முடிந்த தன்னால் ‘போர்க்குற்ற விசாரணை’யைக் கிடப்பில் போடவும் முடியும்’ என்று உறுதியாக நம்புகிறார். அதற்காக அவர் உருவாக்குகிற போலிச் சித்திரங்களில் ஒன்று – மாவீரர் நாளை அனுமதித்திருப்பதாக பாவலா காட்டுவது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்ட அதே நாளில் கொழும்பில் மைத்திரி செய்த பிரகடனத்தைப் படித்தவர்களுக்கு மைத்திரி என்ன செய்கிறார் என்பது புரியும்.
‘இலங்கை ராணுவத்தின் மீதான போர்க்குற்றச்சாட்டுகளுக்கும் அதுதொடர்பான விசாரணைகளுக்கும் முடிவுகட்ட அமெரிக்கா உதவவேண்டும். இந்த விஷயத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டு அடுத்த அதிபர் டோனால்டு டிரம்புக்கு கடிதமே எழுதிவிட்டாராம் மைத்திரி. கொழும்பு நிகழ்ச்சியொன்றில் இதைத் தெரிவித்திருக்கும் அவர் ஐநாவின் அடுத்த செயலர் நாயகமான அன்டோனியோவுக்கும் இதேபோன்ற ஒரு கடிதத்தை அனுப்பியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
கூடவே தனது வழக்கமான பிளாக் மெயிலையும் நிறுத்திவிடவில்லை மைத்திரிபாலா. ‘ராஜபக்சவையும் ராணுவத்தையும் போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாப்பது நாங்கள்தான்…. இதை அவர்கள் மறந்துவிடக் கூடாது… என்னால்தான் அவர்கள் பத்திரமாக இருக்கின்றனர்’ என்று பகிரங்கமாகப் போட்டு உடைத்திருக்கிறார்.
ராஜபக்சவும் ராணுவமும் குற்றவாளிகள் தான் – என்பது மைத்திரிக்குத் தெரிகிறது. அதேசமயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தனது ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதும் தெரிகிறது. தன் பதவியைக் காக்க அவர்களைக் காத்தாக வேண்டும். அதற்காக அமெரிக்காவுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். இதைப் புரிந்துகொள்ளாமல் ‘ஜனநாயக வழியில் மாவீரர் நாளை அனுமதித்திருக்கின்றனர்’ என்று நம்புகிற நண்பர்களை என்னவென்று சொல்வது!