பொதுமக்களின் சிரமங்களை குறைக்க போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்கள் சிலவற்றுக்கு பல பிரதேசங்களில் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பிரதேசத்திலும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து தங்கல்ல நோக்கி பயணிக்கும் பஸ் வண்டிக்கு நேற்று இரவும், மூதூரிலிருந்து திருகோணமலைக்கு பயணிக்கும் பஸ்வண்டிக்கு இன்று அதிகாலையிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இதனால் எவரும் காயமடையவில்லை எனவும், பஸ்சுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பஸ்கள் மீது நடாத்தப்படும் இத்தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.