கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆறு நாட்களுக்கு பின்னர் தெஹிவளை பகுதியில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு இலங்கை போக்குவரத்து சபைக்குரிய 22 அரச பேருந்துகளை பயன்படுத்தி அழைத்து வந்தமையின் ஊடாக 9.5 மில்லியன் ரூபாய் அரச பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக ரிஷாட் பதியுதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் 2 பேரை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் கடந்த 13 ம் திகதி பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
அதன் அடிப்படையில் ரிஷாட் பதியுதீன், இடம்பெயர்ந்தோரை மீள குடியமர்த்துவதற்கான வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சம்சுதின் மொஹமட் பாசில் குறித்த திட்டத்தின் கணக்காளர் அழகரட்னம் மனோ ரஞ்சன் ஆகியோரைக் கைதுசெய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி கோரியது.
பொது சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ரிஷாட் பதியுதீனை கைதுசெய்வதற்கு பிடியாணை ஒன்று அவசியமில்லையென அதன்போது கோட்டை நீதவான் நிதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதன் அடிப்படையில் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவரது கொழும்பு 7 பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள வீடு, புத்தளம் தில்லையடி வீடு, மன்னார் தராபுரம் உள்ளிட்ட வீடுகளில் பொலிசார் சோதனையிட்டனர்.
எனினும் கடந்த சில தினங்களாக ரிஷாட் பதியுதீனை கைதுசெய்வதற்கு பொலிஸ் குழுக்கள் தொடர்ச்சியாக முயற்சிகளை முன்னெடுத்திருந்த நிலையில் இன்று காலை தெஹிவளை எபினேஷர் வீதியிலுள்ள தொடர்மாடியில் ரிஷாட் பதியுதீன் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்க உதவிய அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடாக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்க 24 மணித்தியாலங்களுக்கு முன்ன்ர சட்ட மாஅதிபர் குறித்த சம்பவம் தொடர்பாக பதில் பொலிஸ் மாஅதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்ளத்தின் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
அந்த பணிப்புரைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தால் சந்தேகநபரை கைது செய்ய இந்தளவு காலம் அவசியம் இல்லையென சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரிஷாட் பதியுதீன் தொடர்பாக மேலும் பத்து சம்பவங்கள், குறித்த விசாரணைகள் இடம்பெறுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தை சட்ட மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சிரேஷ்ட சட்டதரணி நிஷார ஜயரட்ன தெரிவித்துள்ளார்.