யாழில் கொரோனா மருத்துவ நிலையம்-பருத்தித்துறை பேருந்து நடத்துனருக்கே முதலாவது சிகிச்சை

362 0

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச மருத்துவமனை, கொரோனா மருத்துவ நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவ நிலையத்தில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பருத்தித்துறை பேருந்து சாலையில் பணிபுரிந்த நடத்துனருக்கே முதலாவதாக சிகிச்சையளிக்கப்பட உள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்ஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இன்றைய தினம் முதலாவது கொரோனா நோயாளியாக இருக்கின்ற பருத்தித்துறை பேருந்து சாலையில் பணிபுரிந்த நடத்துனரை, அனுமதித்து சிகிச்சையளிக்க உள்ளோம்.

குறித்த நடத்துனருக்கு, சிகிச்சை அளிக்கும் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பிரதேச மருத்துவமனையில் இருந்த வெளிநோயாளர் சேவையை பிறிதொரு கட்டடத்தில் இயங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும், உள் நோயாளர்களை நோயாளர் காவு வண்டிகள் ஊடாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட இருக்கின்றன.

எனவே, மக்கள் எவரும் அச்சப்படத் தேவையில்லை. தொற்று ஏற்படாத வகையில் பாதுகாப்பாக கொரோனா மருத்துவ நிலையம் அமைக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.