பாரபட்ச சமூகத்தை கட்டியெழுப்ப 20 மாவட்டங்களில் களம் இறங்கும் இளைஞர், யுவதிகள்

306 0

vavuniyaபாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளில்,  20 மாவட்டங்களில் மனிதவுரிமைகள் தினத்தை அனுஸ்டிப்போம் என அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு கோரியுள்ளது.

வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் அமைப்பின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் குறித்த அமைப்பின் செயலாளர் சி.பிரதீப் கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அன்பிற்கும், நட்பிற்குமான வலையமைப்பு,

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் மனித உரிமைகள் தினத்தை அனுஸ்டித்து வருகின்றோம். 2013ஆம் ஆண்டு மிகவும் நெருக்கடியான நிலைக்கு மத்தியிலும் வடக்கின் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் பிரச்சனைகளை முன்வைக்கும் விதத்தில் எமது மனிதவுரிமைகள் தினத்தினை நடத்தினோம்.

இதில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 250 இளைஞர், யுவதிகள் பங்கு கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் ஜனாதிபதி தேர்தலுக்கான வேலைகள் நடைபெற்ற மிகவும் அச்சுறுத்தலான காலத்தில் யாழ்ப்பாணத்தில் 1700 இளைஞர், யுவதிகளின் பங்களிப்புடன் வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஆவணப்படுத்தி வடமாகாண முதலமைச்சரிடம் மகஜராக கையளித்திருந்தோம். அதை குழப்புவதற்கு பல முயற்சிகள் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டது.

2015ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து ஒரு அரசியல் தீர்வை வலியுறுத்தும் நிகழ்வாக 2ஆயிரத்து 500 இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து யாழ் முற்றவெளியில் ஒரு நிகழ்வினை நடாத்தியிருந்தோம்.

இதன்போது அரசியல் தீர்வை முன்னிறுத்துகின்ற மக்களின் அரசியல் அபிலாசைகள் சிலவற்றை முன்வைத்திருந்தோம்.

இதற்கமைய கடந்த நான்கு வருடமாக நாம் மக்களுடன் இயங்கிக் கொண்டு வருகின்றோம்.

அந்த மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. எமது அமைப்பு ஒவ்வொரு மனித உரிமை தினத்திலும் ஒரு பேசுபொருளை கையாள்கின்றது. அந்த பேசு பொருளை மக்கள் தங்களுடைய பேசுபொருளாக மாற்றிக் கொள்கிறார்கள். அந்தவகையில் 2016 ஆம் ஆண்டு மனித உரிமை தினத்தை ஒரு ‘பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்’ என்ற தொனிப் பொருளில் இந்த மனிதவுரிமைகள் தினத்தை நிகழ்த்தவிருக்கின்றோம்.

இலங்கையில் பல அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பல அரசியல் திருப்பு முனைகள் இடம்பெற்றிருக்கின்றன. எல்லா திருப்பு முனைகளிலும் பாராபட்சம் காட்டுதல் என்ற ஒன்று இடம்பெற்றிருக்கிறது. பாரபட்சம் காட்டியதன் அடிப்படையில் தான் எமது இனப்பிரச்சனையும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன, மத, அரசியல், சமூக ரீதியாக பல்வேறுபட்ட வகையில் பாரபட்சம் காட்டப்படுதல் இலங்கையில் புரையோடிப்போயுள்ளது. தற்போது ஆட்சி மாற்றத் ஏற்பட்டிருக்கிறது. இதனை மக்கள் அதிகம் நம்புகிறார்கள். மக்கள் நம்புகின்ற நிலையில் கூட அவர்களுக்கு தெரியாமலே பாராபட்சம் பார்க்கப்பட்டு பல்வேறு விடயங்களில் விலக்கப்பட்டுள்ளார்கள். இதனை மக்களுக்கு புலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

இந்த மாதம் டிசம்பர் 6ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் திகதி வரை இலங்கையினுடைய 20 தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழும் மாவட்டங்களில் இந்த மனிதவுரிமைகள் தினத்தை கொண்டாடவிருக்கின்றோம்.

பாரபட்சமற்ற சமூகம் ஒன்றை கட்டியெழுப்புதல் என்னும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் பங்குபற்றுகிறார்கள். பாரபட்சத்திற்கு எதிராக நாம் மக்களை ஒன்றுபடுத்தும் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம் ஒரு மகஜரை தயாரித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கும், இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கும் வழங்கவுள்ளோம். இலங்கையில் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் வரவுள்ள நிலையில் மீண்டும் யாப்பு சீர்திருத்திற்திற்கு செல்லாத வகையில் பாரபட்சம் அற்ற வகையில் அது அமைய வேண்டும் என வலியுறுத்தவுள்ளோம்.

யாப்பு சீர்திருத்தம் வெளிப்படைத்தன்மையாக இல்லை. இந்த யாப்பு தொடர்பாக மக்களுக்கு என்ன அறிவு இருக்கிறது. அவர்கள் இதை எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பது தற்போது வரை சந்தேகத்திற்குரிய விடயமாகவே உள்ளது. இந்த யாப்பு மக்களுக்கு புரிய வைக்கக் கூடிய காலஅவகாசத்தை வழங்காது வரவுள்ளது. அந்த வகையில் இந்த யாப்பு ஒரு வெளிப்படைத் தன்மையுடன் அமைய வேண்டும் என்பதும் அதில் பாரபட்சமற்ற தன்மை காரணப்பட வேண்டும் என்பதும் இன, மத, மொழி ரீதியாக பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும் எனவும் குறிப்பிட்டார்.