செட்டிகுளத்தில் துப்பாக்கி முனையில் தாக்குதல் – 5 இளைஞர்கள் காயம்

320 0

வவுனியா, செட்டிக்குளம், கிறிஸ்தவகுளம் பகுதியில் காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்றிருந்த இளைஞர்கள் துப்பாக்கி முனையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக காயமடைந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (16) இரவு 10.00 மணியளவில் செட்டிகுளம், கிறிஸ்தவ குளம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

செட்டிகுளம், கிறிஸ்தவ குளம் பகுதியில் காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்று ஓய்வெடுத்து கொண்டிருந்த 05 இளைஞர்கள் மீது அங்கு வந்த குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

துப்பாக்கிகளை காட்டி கத்தி, வாள், கோடாரி மற்றும் இருப்பு கம்பிகள் போன்ற கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்கியதாகவும், தம்மிடம் இருந்த பணம், நகை, தொலைபேசியை போன்ற உடமைகளையும் அந்த குழு பறித்து சென்றுள்ளதாகவும் காயமடைந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 5 இளைஞர்களும் நேற்று இரவு செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இன்று காலை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் தொடர்பில் வவுனியா வைத்தியசாலை பொலிசார் முறைப்பாட்டை பெற்றுக் கொண்டதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.